Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

வரலாற்றில் திருக்கோவில் - அசவீடோ அழித்த அருஞ்சிற்பக்கூடம் ! (பாகம் 02)

திருக்கோவில் பற்றிய இன்றைய கட்டுரை, மகிழ்ச்சியை விட, சோகத்தையும் ஏக்கத்தையுமே உங்கள் மத்தியில் எஞ்சவிட்டுச் செல்லப்போகிறது. ஏனென்றால் ...


திருக்கோவில் பற்றிய இன்றைய கட்டுரை, மகிழ்ச்சியை விட, சோகத்தையும் ஏக்கத்தையுமே உங்கள் மத்தியில் எஞ்சவிட்டுச் செல்லப்போகிறது. ஏனென்றால் நாம் இந்த வாரம் பார்க்கப் போவது, திருக்கோவில் இடித்துத் தள்ளப்பட்ட கதையை!

போர்த்துக்கேயர் இந்தத் திருத்தலத்தில் செய்திருக்கக் கூடிய நெஞ்சைப் பிழியும் அட்டூழியங்களை! திருக்கோவிலில் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த கற்றூண்களையும், கற்பாளங்களையும் காணலாம். திருப்பணி வேலைக்காகத் தோண்டிய இடத்திலெல்லாம் வேலைப்பாடு கொண்ட கற்றுண்டங்கள் கிடைத்தவாறே இருக்கின்றன. பழைய கற்றளி மண்டபங்கள் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இவை.ஆனால், ஆலயம் முற்றாக உடைக்கப்படவில்லை. அல்லது உடைக்கப்படும் போது, அரசியல் செல்வாக்கால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது! ஆம். பேராசிரியர் இந்திரபாலா உறுதியாகவும், பேராசிரியர் பத்மநாதன் சற்று ஐயத்துடனும், திருக்கோவில் கருவறை 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கலைப்பாணியை வெளிக்காட்டுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். விமானத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள யாளி வரிசைச் சிற்பங்களும், கருவறை வெளிச்சுவரின் மழுங்கிய சிற்பங்களும் அபூர்வமான அரைத்தூண் வேலைப்பாடுகளும், இலங்கையில் வேறெங்கும் காண அரிதான மிகப்பழைமையான சிற்பக்கலை அம்சங்கள். தனித்துவமான வேலைப்பாடுகளைக் கொண்ட திருக்கோவிலின் விமானத்தை, பேராசிரியர் இந்திரபாலா, பொலனறுவை இரண்டாம் சிவாலயத்துடனும், க.தங்கேஸ்வரி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் முந்தைய விமானத்துடனும் ஒப்பிட்டிருக்கிறார்கள். திருக்கோவில் விமானத்தின் பழைமை தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவை. ஆனால், போர்த்துக்கேயரால் கல் மண்டபங்கள், தூண்கள் இடிக்கப்பட்டாலும், கருவறை சிதைக்கப்படவில்லை என்று சொல்வதற்கு இவை போதுமான ஆதாரங்கள். சரி, போர்த்துக்கல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெர்னான்டோ டி குவரோஸ் (Fernão de Queirós, 1617- 1688) என்பவர், இலங்கைக்கு வந்து நீண்ட நாள் தங்கியிருந்த போர்த்துக்கேய மதபோதகர். அவரால் 1687இல் எழுதப்பட்ட “இலங்கை மீதான உலகியல் மற்றும் ஆன்மிக வெற்றி” (The Temporal and Spiritual Conquest of Ceylon) எனும் நூல் குறிப்பிடத்தக்க வரலாற்று நூலாகவும், போர்த்துக்கேய இலங்கை தொடர்பான விரிவான சித்திரங்கள் அடங்கிய சிறந்த நூலாகவும் கொள்ளப்படுவது. அதில் ஓரிடத்தில் குவரோஸ் பின்வருமாறு சொல்கிறார்: “பெற்றிகலோ சிற்றரசில் உள்ள 34 குடியிருப்புகளில், இருபத்துநான்கு, சனச் செறிவு மிகுந்தவை. அவற்றில் ட்ரிகோவிலைச் சூழவுள்ள பகுதி மிக மோசமாகக் காட்சியளிக்கிறது. குடிமக்கள் பெற்றிகலோவின் ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் இங்குள்ள பரந்த வயல்கள் உவராகியிருக்கின்றன. சிலோனின் ஏனைய பகுதிகளை விட, இச்சிற்றரசின் இந்தப்பகுதி தான் நல்ல சாயவேரைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. தேன்மெழுகு, யானைத்தந்தம், எலுமிச்சை, தோடை, அதிக விளைச்சலைத் தரும் அரிசி என்று இங்கு வளம் கொழிக்கிறது. பெற்றிகலோ துறைமுகத்திலிருந்து தென்புறமாக 12 குடியிருப்புக்களைக் கடந்ததும், சிலோனின் புகழ்மிக்க வழிபாட்டுத்தலமாக விளங்கிய அந்த "ட்ரிகோயிலி பகோடா"வைக் காணலாம். “துங்கோவிலே” என்பதே அதன் சரியான பெயர். மூன்று தளம் கொண்ட கோவில் அல்லது மூன்று கோவில்கள் என்று அதற்கு அர்த்தம். அங்கு பல சிற்பங்களும் விக்கிரகங்களும் அமைந்திருந்தன.ஜெனரல். டி.ஜெரோனிமோ டி அசவீடோ அதை இடித்துக் கொள்ளையடித்து, அங்கு ஊழியம் செய்த ‘கணேசேகளைக்’ கொன்றொழித்த காலம் வரை, அந்தப் பகோடா புகழ்பெற்றிருந்தது." பகோடா என்றால் கோவில். திருக்கோவிலைச் சூழவுள்ள பகுதி என்று குறிப்பிட்டு, அதன் செழிப்பை குவரோஸ் விவரிப்பதைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக கண்டு வியந்து சொன்ன சொற்கள் அவை என்பதை ஊகிக்க முடிகின்றது. பெற்றிகலோ துறைமுகத்திலிருந்து 12 குடியிருப்புக்கள் தாண்டி என்று தூரத்தை அவர் துல்லியமாகக் குறிப்பிடுவதன் மூலமும் அவர் இங்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தலாம். அவர் துறைமுகம் என்று சொல்வது இன்றைய மட்டுநகராக இருக்கக்கூடும். திருக்கோவிலைக் கொள்ளையடித்தவன் என்று குவரோஸ் குறிப்பிடும் இந்த அசவீடோ (Jerónimo de Azevedo) இலங்கையின் போர்த்துக்கேயத் தளபதியாக கி.பி 1594 முதல் 1613 வரை பதவி வகித்தவன். 1603ஆம் ஆண்டு யூலை மாதம் திருக்கோவில் சாதாரணமாகவே இயங்கி வந்ததை நாம் போன கிழமை பார்த்தோம். எனவே திருக்கோவில் கொள்ளையடிக்கப்பட்டது,1604இற்கும் 1613இற்கும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டு கால இடைவெளியிலேயே இடம்பெற்றிருக்கவேண்டும். கண்டியை ஆக்கிரமிப்பதில் போர்த்துக்கேயர் ஏற்கனவே பேராசை கொண்டிருந்தனர். அசவீடோவின் தலைமையிலான இறுதியானதும் மிகக்கொடூரமானதுமான கண்டிப்படையெடுப்பு 1611இல் இடம்பெற்றது. கண்டியின் ஆதிக்கத்திலிருந்த கீழைக்கரையில், 1611இற்கு முன்பின்னாகவே போர்த்துக்கேயரின் வன்செயல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதால், திருக்கோவில் சிதைப்பு நிகழ்ந்தது குறிப்பாக 1610 - 1612இற்கு இடையே என்று கொள்ளலாம். குவரோஸ் சொல்லும் சாயவேர் அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களின் முக்கியமான வாணிகப்பொருள்களில் ஒன்று. இம்பூரல் அல்லது சிறுவேர் என்று தமிழில் அறியப்படும் சாயவேர் (Oldenlandia umbellata), சிவப்புநிறத்தைப் பெறுவதற்கும், பட்டு, பருத்தி முதலான துணிகளைச் சாயமிடவும் வரலாற்றுக் காலத்திலிருந்தே பயன்பட்டு வந்த ஒருவகைப் பூண்டுத் தாவரமாகும். திருக்கோவிலைச் சூழப் பெறப்படும் சாயவேரே இலங்கையில் மிகச்சிறந்தது என்ற சொற்கள், அவர் இங்கு நேரடியாக வந்து அவதானித்திருக்கிறார் என்பதற்கான இன்னொரு சான்று. ஆனால் நேரடியாக வந்திருக்கிறார் என்பதற்காக அவரது முழுக்கூற்றையும் உண்மையாகக் கொள்ளமுடியவில்லை. திருக்கோவிலின் சரியான பெயர் என்று, மூன்று கோவில் என்று சிங்களத்தில் பொருள்படும் துன்கோவில (Tuncoule) என்ற பெயரை குவரோஸ் குறிப்பிடுகிறார். திருக்கோவிலை ‘திரிக்கோவில்’ (திரி = மூன்று) என்று பிழையாகப் புரிந்துகொண்டு அவரது சிங்கள உதவியாளர் இதைச் சொல்லியிருக்கக்கூடும். இதே குழப்பமே திருக்கோணமலையின் பெயர் விடயத்திலும் (திரிகோணமலை?) நிலவிவந்ததை – நிலவிவருவதை நாம் காணலாம்.திருக்கோவிலின் சரியான பெயர் திரிக்கோவில் என்பதற்கு வேறெந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. இலங்கை மொழிவழக்கில் அத்தகைய ஒரு பெயருக்கான வாய்ப்பும் மிக அரிது. நிலைமை இப்படியிருக்க, ‘Tuncoule’ என்பதை துங்கோள என்று வாசித்து திருக்கோவிலின் பழைய பெயர் ‘துங்ககோளப்பட்டினம்’ என்று சொல்லும் கட்டுரைகள் கடந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. கிழக்கிலங்கை வரலாற்றறிஞர்கள் பலர் குவரோசின் கூற்றை அப்படியே நம்பி, திருக்கோவிலில் மூன்று கோபுரங்கள் இருந்தன என்றும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். உண்மையில் குவரோஸ் கோபுரங்கள் பற்றித் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. துங்கோவில என்ற (தவறான) பெயருக்கு காரணம் தேடும் நோக்கில் “மூன்று தளம் கொண்ட பகோடா அல்லது மூன்று பகோடாக்கள்” என்றே அவர் விளக்கம் கூறுகிறார். குவரோசின் நூலை வாசிக்கும் எவரும் அவர் உள்ளூர் இடப்பெயரை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெரும்பாலும், தான் விவரிக்கின்ற இடங்களைச் சொல்லும் போது அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதற்கான விளக்கத்தையும் கூடவே அவர் கொடுத்திருக்கிறார். எனவே மூன்று கோபுரங்கள் திருக்கோவிலில் அமைந்திருந்தன என்பதை இப்போதைக்கு நம்மால் உறுதியாகக் கூறமுடியாது. எனினும் ‘ட்ரிகோயிலி பகோடா’வின் சிற்பங்கள், விக்கிரகங்களை குவரோஸ் விசேடமாகச் சொல்வதால், கருவறை விமானச் சிற்பங்களோ அல்லது மண்டபங்களிலிருந்த கலையழகு நிறைந்த அருஞ்சிற்பங்களோ அசவீடோவால் தகர்த்து வீசப்பட்டிருக்கின்றன என்பதையேனும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். குவரோசின் கூற்றில் இறுதி வரி தான் முக்கியமானது.திருக்கோவிலை இடித்த தளபதி அசவீடோ, அக்கோவிலின் சேவைக்காக நியமிக்கப்பட்டிருந்த கணேசேக்களைக் (Ganezes) கொன்றான் என்று அவர் குறிப்பிடுகிறார். குவரோசின் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஸ்.ஜி.பெரேரா, வேறொரு இடத்தில் வரும் “Ganez” என்ற சொல்லுக்கு “கணனான்சே – வணக்கத்துக்குரிய பௌத்தத் துறவி” என்று விளக்கமளித்திருக்கிறார். திருக்கோவில் ஆலயச்சூழலில் இன்றுவரை எந்தவொரு பௌத்தத் தொல்லியல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதால் அந்த விளக்கம் இங்கு பொருந்தாது.. என்றால் கணேசே என்பதற்கு வேறென்ன பொருள் தான் கொள்ளமுடியும்? ஒரேயொரு சாத்தியமே இருக்கிறது. கணிகை! கணிகையர், பழங்காலக் கோவில்களில் நடனம், கலைத்தொண்டு என்று ஊழியம் செய்து வந்த பெண்கள். சுந்தரமூர்த்தி நாயனாரின் மூத்த மனைவி பரவையார் கணிகையர் குலத்தவர் தான். கணிகையர் சோழ - பாண்டிய ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களையே “தளிச்சேரிப் பெண்டுகள்” என்று விளித்து தஞ்சைப்பெருங்கோவிலில் குடியமர்த்தினான் இராஜராஜசோழன். மன்னராட்சி மறைந்த பிற்காலத்தில் இவர்களது பரம்பரையினர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இழிதொழில் செய்யும் பரிதாப நிலையை அடைந்தாலும், கணிகையரின் அன்றைய மதிப்பு மிக்க வாழ்க்கை, அவர்களது செல்வச்செழிப்பு பற்றி தமிழகக் கல்வெட்டுகள் கதை கதையாகச் சொல்கின்றன.இலங்கையில் கூட மாத்துறை தேனவரை நாயனார் கோவிலிலும், மாவிட்டபுரம், பொன்னம்பலவாணேச்சரம் முதலிய தலங்களிலும் வசித்த கணிகையர் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படிப் பார்த்தால், குவரோசின் ‘திருக்கோவில் கணேசேக்கள்’ கணிகையராகவே இருக்கவேண்டும். கோவிலுக்கு ஊழியம் செய்த கணிகையர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதை குவரோஸ் விதந்து குறிப்பிட அதிக வாய்ப்பு இருக்கிறது. கோவிலைக் கொள்ளையிட்டுச் சூறையாட வந்தவர்கள், பெண்களைக் கண்டால் சும்மா விட்டா சென்றிருப்பார்கள்? கிடைக்கின்ற இந்தக் குறிப்புகளே குலைநடுங்கச் செய்கின்றன. குவரோஸ் திருக்கோவில் கொள்ளையடிக்கப்பட்டு சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பின் இந்தக் குறிப்பை எழுதுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கோவிலும் அதன் அழகிய சிற்பங்களும் சிதைக்கப்பட்டன; கோவிற்பெண்டிர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்; கோவிலைச் சூழ வாழ்ந்த மக்கள் அஞ்சி இடம்பெயர்ந்து விட்டார்கள்; என்ற மூன்றே மூன்று செய்திகளே ‘வேறென்ன நடந்திருக்கும்’ என்று ஊகிக்கப் போதுமானவை.திருக்கோவிலில் மட்டுமல்ல; பெரும்பாலான ஆலயங்களில், பொதுவெளிகளில் இன்றும் இத்தகைய அராஜகங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. மனிதனின் கீழ்மை வெளிப்படும் இந்தக் கொடுஞ்செயல்களுக்குப் பொருள் தான் என்ன? கருவறைக்குள் எட்டிப் பார்த்துக் கேட்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் மாறாத அழகுப்புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருக்கிறான் அந்தக் கள்வன். அதுவும் சரி தான். மானுடர்கள் எளியவர்கள் நாம். நமக்குத் தான் காலத்தின் மர்ம முடிச்சுகள் புரிவதில்லை. அவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா, என்ன?


கோவில்' என்பது சைவரைப் பொறுத்தவரை மிகப்புனிதமான சொல். ஆனால் ஒரு ஆலயம் மாத்திரமன்றி ஒரு ஊரே 'திருக்கோவில்' என்று அழைக்கப்படும் பெருமையை தமிழகத்தில் கூட எந்தவொரு தலமும் பெற்றதில்லை. அந்த விதத்தில் ஈழவளநாடும் கீழைக்கரையும் பெருமைப்படும் படி கோவில் கொண்ட இறைவன் திருக்கோவில் சித்திரவேலாயுதன்.

கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்பெற்ற முருகத்தலமாகவும் விளங்குகின்ற திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்வரும் யூன் 25ஆம் திகதி அன்று திருக்குடமுழுக்குக் காண இருக்கின்றது. அதை முன்னிட்டு வெளியாகின்றது இந்த வரலாற்றுக் கட்டுரைத்தொடர்.

நன்றி - அரங்கம் மற்றும் துலாஞ்சனன்