Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

[V.Thulanjanan] தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர் அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன...[V.Thulanjanan]


தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன் மனுநேய கயவாகு, ஒரு குளம் கட்டி அந்தப்பெயரைச் சூட்டியதாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். காலனித்துவ இலங்கை வரைபடங்களில் அவ்வூர் தம்பொலிக்குளம், தமொலிகாமம், தம்பலி ஊர் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு நகரின் தெற்கே 72 கி.மீ தொலைவில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தக் கிராமம் தம்பிலுவில்லூர். இருபுறமும் கடலும் களப்பும் அரண் செய்ய, குளிர்காற்றில் நிழல்மரங்கள் அசைந்தாடும் தண்பொழிலூர்.


அக்கரைப்பற்று நகருக்கும், திருக்கோவில் கிராமத்துக்கும் இடையே அமைந்திருக்கும் தம்பிலுவில் கிராமம், தென்கிழக்கிலங்கையின் முக்கியமான இரு நிலக்குறிகள் (Landmarks) சார்ந்து முதன்மை பெறுகிறது. ஒன்று திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம். இன்னொன்று தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்.

திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில். தெற்கே பாணமையிலிருந்து வடக்கே நாவற்குடா வரை, இன்றைய மட்டு – அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான ஊரவர்கள் அக்கோயில் நிர்வாகத்தில் பங்காற்றியதை ஆலயத்தின் பதிவேடுகள் கூறிநிற்கின்றன. ‘பண்டு பரவணி‘ எனும் தொன்மையான நடைமுறைப்படி, இவ்வாலயத்தின் வண்ணக்கராக நியமிக்கப்படுபவர் தம்பிலுவில்லின் குறிப்பிட்ட குடியைச் சேர்ந்தவராக இருக்கிறார். பண்டு பரவணி என்பது, மாகோன் வகுத்த நடைமுறை என்கிறார்கள்.

அடுத்து, தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம். அங்கு தான் கி.பி 1407இல் அல்லது 1519இல் பொறிக்கப்பட்ட ‘தம்பிலுவில் கல்வெட்டு‘ கிடைத்தது. கிழக்கிலங்கையில் பட்டிமேடு, காரைதீவு, தம்பிலுவில் ஆகிய மூன்று இடங்களுமே மிகப்பழைய கண்ணகி வழிபாட்டு மையங்களாகச் சொல்லப்படுகின்றன. பட்டிமேடு மற்றும் காரைதீவுத் தொன்மங்களில் தம்பிலுவில் முதன்மைப்படுத்தப்படுவதால் அங்கு தான் முதல் கண்ணகி ஆலயம் அமைந்திருக்கவேண்டும். சம்பூர், இலங்கைத்துறை, தம்பிலுவில் ஆகிய மூன்று இடங்களிலும் முறையே காளி, செண்பகநாச்சி, கண்ணகி ஆகியோரின் சிலைகள் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தொன்மத்தை இங்கு இணைத்து நோக்கலாம்.தம்பிலுவிலுக்கென்று தனியாக ஒரு புலவர் பரம்பரை ஒன்றுண்டு. கண்ணகி அல்லது அல்லாஹ்வை நோக்கி மழை வேண்டி இரக்கும் மழைக்காவியம், கிழக்கிலங்கைக்கே உரித்தான சிற்றிலக்கியம். அந்த மழைக்காவியங்களுக்கு முன்னோடி, தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த கட்டாடி கண்ணப்பன் பாடிய தம்பிலுவில் மழைக்காவியம். அக்காவியத்தில் இடம்பெறும் அகச்சான்றின் மூலம் அது கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் காலத்தையது (1629 – 1687) என்று நம்பப்படுகிறது.

கட்டாடி கண்ணப்பனுக்குச் சில ஆண்டுகள் பின்பு இங்கு வாழ்ந்தவர் கணபதி ஐயர் எனும் வீரசைவக் குருக்கள். கண்டியின் நரேந்திரசிங்க மன்னன் (1707 -1739) மீது இவர் பாடிய ‘நரேந்திரசிங்கன் பள்ளு‘ புகழ்பெற்ற வசந்தன் இலக்கியமாகும். கண்டி மன்னன் அவைக்குச் சென்று, இவர் பள்ளுப் பாடிய சந்தர்ப்பம் தொடர்பாக சுவையான செவிவழிச் செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

இனி கடந்த நூற்றாண்டில் இவ்வூரில் வாழ்ந்த இருபெரும் புலவர்களாக பண்டிதர் குஞ்சித்தம்பி, உவில்லியம்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம். விபுலானந்தரின் அடிச்சுவட்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றோரில் குறிப்பிடத்தக்கவரான குஞ்சித்தம்பிப் பண்டிதர், சிறுத்தொண்டர் நாடகம், வருக்கமாலை, பஜனாமிர்தம் முதலான நூல்களை எழுதியுள்ளார். உவில்லியம்பிள்ளை, கண்டிராசன் சரிதை, புவனேந்திரன் விலாசம் முதலான நாடகங்களையும், இந்திராபுரி இரகசியம், மஞ்சட்பூதம் ஆகிய நாவல்களையும் படைத்தவர்.

தம்பிலுவில்லில் இன்று சுமார் பன்னிரண்டாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 99 வீதமானவர்கள் சைவர்கள். இங்கு மிகக்குறைந்தளவே கிறிஸ்தவர்கள் காணப்படும் போதும், அவர்களும் தமிழுணர்வை விட்டுக்கொடுத்ததாயில்லை. கிறிஸ்தவ மரபில் இங்கு தோன்றிய முதன்மையான புலவராக ‘இரட்சணிய அம்மானை‘ பாடிய பவுல் கனகரெத்தினம் அவர்களைக் குறிப்பிடலாம். மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் மற்றும் கிழக்கிலங்கைப் பண்டிதர் சங்கம் ஆகியவற்றின் பொதுச்செயலாளராக விளங்கி, அண்மையில் கனடாவில் மரித்த வித்துவான் செபரெத்தினத்தின் தந்தை இவர்.

நாற்பதாண்டுகளுக்கு முன் நாட்டுக்கூத்தும் வசந்தனாடலும் செழித்த தம்பிலுவில்லில் இன்று அவற்றுக்கான சிறு தடயங்களைக் கூடக் காணமுடியவில்லை. வேதனையான விடயம் இன்னொன்று உண்டு. அண்மையில் மட்டக்களப்பின் முதல் நாவல் என்ற அடைமொழியுடன் திரு.ஏரம்பமுதலி அவர்களால் 1934இல் எழுதப்பட்ட ‘அரங்கநாயகி‘ மீள்பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், பண்டிதர் வீ.சீ.கந்தையா, தன் ‘மட்டக்களப்புத் தமிழகம்‘ நூலில் மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியர் என்று தம்பிலுவில் உவில்லியம்பிள்ளையையே சுட்டிக்காட்டுகின்றார்.

முதல் நாவல்
============

சரி, இப்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளடங்கும் தம்பிலுவில், மட்டக்களப்பை உரிமை கொண்டாடமுடியாது என்பதால், அம்பாறையின் முதல் நாவல் என்றோ, தென்கிழக்கிலங்கையின் முதல் நாவல் என்றோ, அவர் எழுதிய நாவல்களைப் பிரசுரிக்கலாம். ஆனால் அதற்கு அவர் நாவல் எழுதிய ஆண்டு விவரமோ, நாவல்களின் மூலப்பிரதிகளோ எதுவுமே கிடைக்கவில்லை. உவில்லியம்பிள்ளையின் நூல் பிரதிகள் மாத்திரமல்ல் பண்டிதர் குஞ்சித்தம்பி எழுதி வெளியிட்ட எந்தவொரு நூலுமே கூட யாரிடமும் கிடைப்பதாக இல்லை! காலத்தின் கோலம்.

துருக்கியப் பேராசிரியர் நூர் யால்மன், அவுஸ்திரேலிய பேராசிரியர் லெஸ்டர் ஹெய்ட், அமெரிக்கப் பேராசிரியர் டெனிஸ்.ஜி.மகில்வ்ரே ஆகிய மானுடவியல் அறிஞர்கள் இலங்கையை – இலங்கைத் தமிழரை மையமாக வைத்து மேற்கொண்ட சமூகவியல் கற்கைகளில் தம்பிலுவில் கிராமத்தை முக்கியமான ஆய்வுக்களமாகக் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இத்தனை பெறுமதி வாய்ந்த இவ்வூர் சார்ந்த காத்திரமான ஆய்வுகள் தொடரும் போது, கிழக்கிலங்கைச் சமூகத்திலும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும், எங்கோ விடுபட்டு அறுந்து போன சமூக – வரலாற்றுக் கண்ணிகளில் ஒன்றை மீளப்பொருத்துவதற்கு இவ்வூர் உதவக்கூடும். சிலம்பேந்தித் தண்பொழிலூர் ஆளும் செண்பகநாச்சி மனது வைப்பாளாக!

— விவேகானந்தராஜா துலாஞ்சனன் —  thambiluvil.info


இக் கட்டுரையானது கடந்த மாதம் 2018.03.16 திகதி வெள்ளிக்கிழமை அரங்கம் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றிகள் - அரங்கம் பத்திரிகை மற்றும்  வானொலி