Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் ! வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)

திருக்கோவில் இலங்கையின் மிகப்புராதனமான வழிபாட்டிடங்களில் ஒன்று. சரி. வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியர் திருக்கோவிலைப் பற்றி எங்காவது க...


திருக்கோவில் இலங்கையின் மிகப்புராதனமான வழிபாட்டிடங்களில் ஒன்று. சரி. வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியர் திருக்கோவிலைப் பற்றி எங்காவது குறிப்பிட்டிருக்கிறார்களா?

இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், அக்கோவில் அவர்களால் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறது?இப்படித் தேடிப்பார்க்கும் போது கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருக்கும். கூடவே வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை ஓரளவு கூடியதாகவும் இருக்கும் இல்லையா? அப்படியான குறிப்புகளை மாத்திரம் நாம் இத்தொடரில் ஆராய இருக்கிறோம்.உண்மையில் திருக்கோவில் பற்றி ஐந்துக்கு மேற்பட்ட ஐரோப்பியர் குறிப்புகளும் பதினைந்துக்கு மேற்பட்ட வரைபடங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. என்றாலும் வெள்ளையர் – ஐரோப்பியர் என்று சொல்லும் போது நாம் இன்னொரு விடயத்தை நினைவு கூரவேண்டி இருக்கிறது. அவர்கள் பிறசமயத்தவர்கள் என்பதால் சைவ சமயம் பற்றிய போதிய அறிமுகம் அவர்களுக்கு இருந்திருக்காது. உள்ளூர்ச் சமயங்கள் பற்றி அவர்கள் ஒரு உல்லாசப்பயணியின் பார்வையில் எழுதியிருப்பார்களே தவிரஇ ஒரு ஆய்வாளராகவோ வரலாற்றறிஞராகவோ அல்ல. அவர்கள் கண்ட – கேட்ட விடயங்களில் சில உள்ளூர்வாசிகளால் அவர்களுக்குத் தவறாகவும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கக்கூடும். இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் அவர்களது குறிப்புகளை நாம் அணுக வேண்டும்.1602 ஆமாண்டு ஒல்லாந்திலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வருகை தந்த ஒல்லான்டிஸ்சே சவுன் (Holländische zaun) எனும் கப்பலில் பயணித்தவர் 'ஜொஹான் ஹேர்மன் வொன் ப்ரீ' (Johann Herman Von Bree) எனும் இடச்சுப் பெருவணிகர். இந்தக் கடற்பயணத்திலேயே நோய்வாய்ப்பட்டு உயிர்நீத்த இவரது நாட்குறிப்பேடு இலங்கை தொடர்பான மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. திருக்கோவில் பற்றி முதன்முறையாகக் குறிப்பிடும் ஐரோப்பியரும் இவர் தான்.மட்டக்களப்புக்கு 1603 இற்கு வருகை தந்த வொன் ப்ரீயின் கப்பல், மட்டக்களப்பை ஆண்ட வன்னிமையூடாக அப்போதைய கண்டி மன்னன் முதலாம் விமலதர்ம சூரியனைத் தொடர்பு கொண்டு தன் வணிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வொன் ப்ரீயின் குறிப்புகளில் மட்டக்களப்பு வன்னிமையும், 'அரசன்' என்றே அழைக்கப்படுகிறான். மட்டக்களப்பு வன்னிமையையே அவர்கள் இலங்கையின் அரசன் என்று முதலில் கருதியதும், அவனை விட கண்டி மன்னன் பலம் வாய்ந்தவன் என்று அறிந்தபோது அவர்கள் அடைந்த அதிர்ச்சியும் இந்த ஒல்லாந்துக் குறிப்புகளில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு ஆதாரங்களின் மூலம் இந்த மட்டக்களப்பு வன்னிமையின் பெயர், தர்மசங்கரி அல்லது தர்மசிங்கத்துரை என்று தெரிகிறது. (இங்கு சொல்லப்படுகின்ற மட்டக்களப்பு சம்மாந்துறைக்கு அண்மையில் இருந்த பழைய மட்டுநகர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.)தனது 1603 ஆமாண்டு யூலை 13ஆம் திகதிய நாட்குறிப்பில், வொன் ப்ரீ தமக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமை ஒன்றை எழுதுகின்றார். அவர்களது கப்பலும் படகொன்றும் அப்போது பொலிகாம நதியில் (பழுகாம ஆறு – மட்டக்களப்பு வாவி!) நங்கூரமிட்டிருந்தன. கண்டி மன்னன் விமலதர்மசூரியனிடம் தாங்கள் (ஒல்லாந்தர்) அனுப்பிய தூதர் திரும்பி வரவில்லை. அது தொடர்பான பதிலோ, கோரிய வணிகப்பொருட்களோ எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் உண்மையில் கண்டி மன்னனின் பதிலுக்காக மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருந்தார்கள். எனவே அக்கப்பலை ஓட்டி வந்திருந்த ஒல்லாந்து துணைக் கடற்படைத் தளபதி பொறுமை இழந்திருந்தான். ஆனால் அன்றைக்கு மட்டக்களப்பிலிருந்து வந்திருந்த 'ஆராச்சி' ஒருவரை அவர்களால் சந்திக்கமுடிந்தது. அது தொடர்பாக வொன் ப்ரீ வருமாறு எழுதுகிறார்.'மாத்துறை அல்லது அருகிலுள்ள வேறோர் இடத்திலிருந்து பாக்கு, கறுவா, மிளகு என்பன வருவதாகவும், அவற்றை எடுத்து வரும் இரு சம்பான்களுக்கு அனுமதிப்பத்திரங்களைத் தந்தால், அவற்றை ஒல்லாந்தர் எடுத்துக்கொள்ள அனுமதிப்போம் என்றும் ஆராச்சி தெரிவித்தார். அங்கிருந்து நான்கு அல்லது ஐந்து மைல் தெற்கேயுள்ள திரக்கோய் எனும் இடத்துக்கு மட்டக்களப்பு மன்னன் அடுத்த நாள் செல்லப்போவதாக அவர் மேலும் கூறினார். அங்குள்ள ஒரு கோவிலுக்கு அல்லது தெய்வத்துக்கு பெரிய விழா ஒன்று நடக்கப்போகின்றது. அந்த விழா முழுநிலவு வரை ஒன்பது, பத்து நாட்கள் நீடிக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுற்றிவர உள்ள எல்லா இடங்களிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள். எனவே அந்த நாட்களில் எங்களுக்குக் பண்டமாற்றுக்காக வருகின்ற கோழியோ பழங்களோ மிகக்குறைவாகவே கிடைக்கும் அல்லது சிறிது கூட கிடைக்காமலும் போகலாம் என்பதைத் தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த வழக்கத்தை ஆண்டு தோறும் தீவின் வெவ்வேறு இடங்களில் அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.'சம்பான்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்த இடம் தான் சம்பாந்துறை - இன்றைய சம்மாந்துறை என்று முன்பே அறிந்திருப்பீர்கள். சம்பான் என்று அழைக்கப்பட்ட படகுகள் தான் அக்காலத்தில் இலங்கை வியாபாரத்தில் முக்கியமான பங்கு வகித்தன. ஆராச்சி என்பது, கண்டி இராசதானி காலத்தில் அரச அலுவலர் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டம். அந்தப் பட்டத்தைக் கொண்டிருந்த ஒருவர் மூலம், வணிக நோக்கில் வந்திருந்த ஒல்லாந்தர் இராஜதந்திர ரீதியில் கையாளப்பட்டிருக்கிறார்கள் என்பது வொன் ப்ரீயின் குறிப்பின் மூலம் புரிகின்றது.இனி திரக்கோய் என்று வொன் ப்ரீ குறிப்பிடுகின்ற இடம் திருக்கோயில் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மட்டக்களப்பிலிருந்து நான்கைந்து மைல் தெற்கே அது இருக்கின்றது என்கிறார் அவர். பழங்கால இடச்சு மைல் ஒன்றின் அண்ணளவான தூரம்இ இன்றைய சர்வதேச அளவீட்டில் 5 – 6 கிமீ ஆகலாம். எனவே திருக்கோவில் மட்டக்களப்பிலிருந்து 20 – 30 கி.மீ தொலைவில் இருக்கின்றது. இங்கு சொல்லப்படும் மட்டக்களப்பு, சம்மாந்துறை என்பதை மீண்டுமொருமுறை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றுள்ள பெருந்தெருக்களின் கணக்குப்படி, திருக்கோவிலுக்கும் சம்மாந்துறைக்குமான இடைத்தூரம் 35 கி.மீ

.

முழுநிலவு வரை ஒன்பது பத்து நாட்கள் நடக்கப்போகும் விழாவுக்காக மட்டக்களப்பு மன்னர் அங்கு செல்கிறார். 1603 ஆமாண்டு நாட்காட்டியைப் பார்த்தால் வொன் ப்ரீ இக்குறிப்பை எழுதும் யூலை 13இற்கு சரியாக பத்து நாட்கள் கழித்து யூலை 22ஆம் திகதி முழுநிலவு வருகின்றது. ஆடிப்பூரணை! திருக்கோவிலில் அப்போது தீர்த்த உற்சவம் இடம்பெற்றது ஆடிப்பூரணையில்!ஆடிப்பூரணை இலங்கைப் பண்பாட்டில் இன்றும் மிக முக்கியமான நாளாக விளங்குவதைக் காணலாம். 'தீவின் வெவ்வேறு இடங்களில் ஆண்டுதோறும் மக்கள் கடைப்பிடிப்பதாக' வொன் ப்ரீ குறிப்பது ஆடிப்பூரணை விழாவைத் தான் என்று கொள்ளமுடியும். கண்டிப் பெரகரா இடம்பெறுகின்ற சிங்கள நாட்காட்டியின் எசல போயா தினம் பெரும்பாலும் தமிழ் ஆடிப் பௌர்ணமியிலேயே வரும். கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா முடிவடைவதும் அதே நாளில் தான். நானூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலிலும் அதுவே விழா நாளாக இருந்திருக்கிறது என்பதை இந்த ஒல்லாந்துக் குறிப்பு கூறுகின்றது.ஆனால் இன்றைக்கு திருக்கோவிலின் தீர்த்தோற்சவம் இடம்பெறுவது ஆடி அமாவாசையில். இந்த உற்சவ தின மாற்றத்திற்கும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் வருகின்ற 'ஆடகசௌந்தரி மாமாங்கத்தில் ஆண்டு தோறும் தீர்த்தமெடுத்துக் கொண்டு திருக்கோவில் சமுத்திரத்தில் கலந்து ஆடித்திங்கள் அமாவாசை அன்று ஸ்நானம் செய்து கொண்டாடி வந்தனள்' என்ற குறிப்புக்கும் தொடர்பு இருக்கக்கூடும். திருக்கோவில், மாமாங்கம் இரண்டின் திருவிழாக்களுமே கிழக்கிலங்கை மக்களின் பேச்சுவழக்கில் 'தீர்த்தக்கரை' என்றே அறியப்படுகின்றது என்பதை நாம் இங்கு நினைவுகூரலாம்.எது எப்படியோ, நானூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலின் ஆடிவேல் விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர் ; விழா முழுவதும் மட்டக்களப்பை ஆண்ட மன்னன் அங்கு சென்று தங்கியிருந்தான் ; அந்தப் பத்து நாட்களும் ஒல்லாந்தரின் வியாபாரம் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது என்ற குறிப்புகள் மிக உறுதியாகச் சொல்வது ஒன்றையே. கிழக்கின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் ஐரோப்பியர் கால் பதித்து விட்ட 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இலங்கையில் – குறிப்பாக கிழக்கிலங்கையில் புகழ் பூத்திருந்த ஆலயம். அதற்கும் பல்லாண்டுகள் முன்பு அது எப்படி இருந்திருக்கும்? அதை நாமே கற்பனை பண்ணிப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.
'கோவில்' என்பது சைவரைப் பொறுத்தவரை மிகப்புனிதமான சொல். ஆனால் ஒரு ஆலயம் மாத்திரமன்றி ஒரு ஊரே 'திருக்கோவில்' என்று அழைக்கப்படும் பெருமையை தமிழகத்தில் கூட எந்தவொரு தலமும் பெற்றதில்லை. அந்த விதத்தில் ஈழவளநாடும் கீழைக்கரையும் பெருமைப்படும் படி கோவில் கொண்ட இறைவன் திருக்கோவில் சித்திரவேலாயுதன்.

கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்பெற்ற முருகத்தலமாகவும் விளங்குகின்ற திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்வரும் யூன் 25ஆம் திகதி அன்று திருக்குடமுழுக்குக் காண இருக்கின்றது. அதை முன்னிட்டு வெளியாகின்றது இந்த வரலாற்றுக் கட்டுரைத்தொடர்.


நன்றி - அரங்கம் மற்றும் துலாஞ்சனன்