Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

ஆவணப்படுத்தப்படுகிறது தம்பிலுவில் கிராமம்!

ஊர் ஆவணப்படுத்தலின் கீழ் சேகரிக்கப்பட்ட தம்பிலுவில்லின் பிரித்தானிய வரைபடமொன்று.  1800களில் வரையப்பட்டது. சிங்களப் பண்பாட்டை ஆராய்வதற்...

ஊர் ஆவணப்படுத்தலின் கீழ் சேகரிக்கப்பட்ட தம்பிலுவில்லின் பிரித்தானிய வரைபடமொன்று.  1800களில் வரையப்பட்டது.

சிங்களப் பண்பாட்டை ஆராய்வதற்காக 1960களில்  இலங்கை முழுதும் சுற்றியவர் துருக்கியப் பேராசிரியர் நூர் யால்மன். அவர் பாணமைக்கு வந்த  போது, தம்பிலுவில்லுக்கும் பாணமைக்கும் இருந்த மணத்தொடர்பையும், கண்ணகி வழிபாட்டுறவையும் அறிந்து, "போதி மரத்தின் கீழ்" எனும் தனது புகழ்பெற்ற நூலில், தம்பிலுவில் கிராமத்தை   ஆய்வுலகுக்கு அறிமுகப்படுத்துகிறார்.  அவரது மானுடவியல் கோட்பாடுகளை படிக்கக் கிடைத்த அவுஸ்திரேலியப் பேராசிரியர் லெஸ்டர் ஆர் ஹெய்ட், யால்மனின் ஆய்வுகளை மீளாய்வு செய்ய இலங்கைக்கு வருகிறார். எங்கு? தம்பிலுவில்லுக்கு! 1970களில் சில நாட்கள் தம்பிலுவில்லில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட ஹெய்ட், அந்த ஆய்வுகளின் அடிப்படையில்  யால்மனின் சில கோட்பாடுகள் தவறு என்று நிரூபித்து "Social Compass" எனும் பிரபலமான சமூகவியல் ஆய்வேட்டில் ஒரு ஆய்வுக்கட்டுரை வரைகிறார். அது பரவலான கவனிப்பைப் பெறுகின்ற அதே காலத்தில், இலங்கையில் வந்து தங்குகிறார் டெனிஸ் ஜி. மக்ஜில்வ்ரே எனும் அமெரிக்கப் பேராசிரியர்.

அவரது ஆய்வு, அப்போது சூடேறிக்கொண்டிருந்த இனமுறுகலையும் அதைச் சார்ந்து தமிழ் - முஸ்லீம் உறவையும், மூவினங்களும் அடுத்தடுத்து வாழும் கிழக்கிலங்கையையும் மையமாக வைத்து விரிவடைகிறது. ஏற்கனவே கவனிக்கப்பட்ட தம்பிலுவில் கிராமத்தையும், அதற்கருகே தமிழரும் முஸ்லீமும் அருகருகே செறிந்து வாழும் அக்கரைப்பற்றையும் ஆய்வுக்களமாக தெரிந்தெடுக்கும் அவர், 1975களிலிருந்து 2000கள் வரை அற்புதமான மானுடவியல் ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை எழுதுகிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கது,  2008இல் வெளியான "Crucible of Conflict"  எனும் நூல்.

மக்ஜில்வ்ரேக்கு அடுத்ததாக வருபவர் புகழ்பெற்ற சிங்கள மானுடவியலாளர் கணநாத் ஒபேயசேகர. சிங்கள பத்தினி வழிபாடும் தமிழ் கண்ணகி வழிபாடும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை என்ற கருத்தை முன்னிலைப்படுத்துவதே அவரது நோக்கம் என்றாலும், தம்பிலுவில் கண்ணகி வழிபாட்டின் மையங்களுள் ஒன்றான வடசேரிக் கோவலர் கோயில், தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமாக மாறியதன் பின்னணியை தன் "பத்தினி வழிபாடு" நூலில் அவர் ஆராயும் பாங்கு ஓரளவு கவனிக்கத்தக்கது.

இலங்கையின் கீழைக்கரையில் ஒரு மூலையில் அமைந்திருக்கும் தம்பிலுவில் கிராமம், ஈழத்து சமூகவியலிலும் மானுடவியலிலும் இத்தனை விரிவாகப் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஊர். ஆனால் அதை நினைத்து பெருமிதப்படும் இடத்திலா நாம் இருக்கிறோம்?

தம்பிலுவில் பற்றி அரங்கம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. "மட்டக்களப்பின் முதல் நாவல்" என்று பதிவு செய்யப்பட்டிருந்த "இந்திராபுரி இரகசியம்" நாவலை எழுதியவர் தம்பிலுவில் உவில்லியம்பிள்ளை. அதன் இடத்தை வேறொரு நாவல் பிடித்து இன்று மீள்பதிப்புக் கண்டு விழாவும் எடுக்கப்படுகிறது. அதைத் தவறென்று சொல்லக்கூடியவர்களாகவோ, அல்லது அதற்கு மாற்றாக நம் மண்ணின் படைப்பை பதிப்புச் செய்யக்கூடியவர்களாகவோ நாம் இல்லை. ஏனென்றால், உவில்லியம்பிள்ளை அவர்களின்  நாவலோ அதன் பிரதிகளோ எதுவுமே நம் கைவசம் இல்லை. ஆதாரம் இல்லாமல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெருமை பேசுவது?
நூலகம், இலங்கைத்தமிழர் சார்ந்து
ஆவணப்படுத்தலை முன்னெடுக்கும்
இலாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும்

இன்று நமக்கு ஒரே ஒரு துருப்புச்சீட்டு எஞ்சியுள்ளது. ஆவணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு நூலகம் நிறுவனம். வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால், அதன் மின்னூல் வலைத்தளத்துக்கு ஒருதடவையேனும் செல்லாமல் இருக்கமாட்டீர்கள்.

வரலாற்றில் தமிழருக்குள்ள அசிரத்தையை நீக்கும் முகமாக,  நூலகம் நிறுவனம் முன்மொழிந்துள்ள திட்டம் "ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்". இலங்கையின் ஒவ்வொரு ஊரும் தன் ஊரின் வரலாறு, மரபுகள், அங்கு மறைந்துவரும் வழக்காறுகள், புகழ்பெற்ற இடங்கள் அனைத்தையும் காணொளி, புகைப்படம், ஒலி, பல்லூடக வடிவங்களில் சேமித்து இணையத்தில்  வலையேற்றுவது அத்திட்டத்தின் நோக்கம். ஆய்வாளர்களும் ஆர்வமுள்ளவர்களும், இருந்த இடத்திலிருந்தே அவற்றைத் தேடி அறிந்துகொள்ளும் வண்ணம், ஆவணகம் வலைத்தளத்தில் அவை பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒருநாள் அவற்றின் பெறுமதி விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நூலகம் நிறுவனம் முன்மொழிந்துள்ள ஊர் ஆவணப்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலாவது ஊர், தம்பிலுவில். தம்பிலுவில் தொடர்பான பழைய நூல்கள், ஏட்டுச்சுவடிகள், சில புகைப்படங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வாய்மொழி வரலாறு (குறித்த சில நபர்களிடம் பேட்டி காண்பது) பெறுவதற்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன. ஆனால், ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தங்களிடமுள்ள பழைய ஆவணங்களை சிலர் குப்பைகளாகக் கருதி வெளியே வீச, இன்னும் சிலர் குடும்பச்சொத்து என்று மறைத்துவைத்து அவற்றை செல்லரித்துப்போக வைக்கிறார்கள்.

பழைய வாழ்த்து அட்டைகளோ, திருமண அழைப்பிதழ்களோ, மரண அறிவித்தல்களோ, கோயில் விஞ்ஞாபனங்களோ,  எத்தனையோ குப்பையில் வீசப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றுமே ஆவணங்கள் தான். தம்பிலுவில்லைப் பொறுத்தவரை  இதுவரை ஓரளவு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன என்ற போதும், பெரும்பாலானவை எம் கைகளில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  ஆவணப்படுத்தலில் அக்கறை உள்ளவர்கள், தங்களிடம் பழைய ஆவணங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மிகப்பழைமையான ஆவணங்களை  தங்கள் குடும்பப்பொக்கிஷமாக அல்லது தனிப்பட்ட சேகரிப்புகளாகப் பேணுபவர்கள் அஞ்சத்தேவையில்லை. அத்தகைய அரிய சேகரிப்புகள் நவீன தொழிநுட்ப உத்திகளைப் பயன்படுத்தி போட்டோபிரதி அல்லது மின்வருடல் (scan) செய்யப்பட்டு வழங்கியபடியே உங்களை வந்தடையும் என்று உத்தரவாதம் தரமுடியும்.

இந்த விடயத்தில் மேலதிக விவரம் தேவைப்படுபவர்கள், பங்களிக்க விரும்புபவர்கள், கீழ்வருவோரைத் தொடர்பு கொள்ளலாம்:

* திரு. வி.துலாஞ்சனன், தொடர்பாடல் அலுவலர், நூலகம் நிறுவனம்
(vthulans@thambiluvil.info - 0777652081)
* திரு.இரா.நர்த்தனன் - (narth@thambiluvil.info - 075-2855051)

பிற்குறிப்பு:
1. ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்துக்கு மட்டுமன்றி, நூலகம் நிறுவனம் மேற்கொள்ளும் பயனுள்ள எத்தனையோ திட்டங்களுக்கு பெருந்தொகையான பணம் செலவாகின்றது. முழுக்க முழுக்க நன்கொடையாளரின் நிதியில் தான் இவை இடம்பெறுகின்றது. வேறுவிதங்களில் பங்களிக்க முடியாதவர்கள், குறைந்த பட்சம் நிதிப்பங்களிப்பாவது செய்ய முடியும்.

2. தம்பிலுவில் கிராமத்தவர்கள் மட்டுமல்ல; இதைப் படிக்கும் எந்தத் தமிழரும், நூலகம் நிறுவனத்துக்காகக் காத்திராமல், தங்கள் தங்கள் ஊர் தொடர்பான ஆவணங்களைத் தனிப்பட்ட ரீதியிலேனும் சேகரிக்கத் தொடங்கலாம். என்னென்ன விடயங்கள் முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற விவரம் இங்கு உள்ளது. இயன்ற விரைவில் ஆவணப்படுத்துங்கள்! ஒவ்வொரு கணமும் நாம் ஏதோ ஒன்றை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை, வரலாற்றை புறக்கணிக்கும் தமிழர்களாக வேதனையுடன் சுட்டிக்காட்டியே ஆகவேண்டி இருக்கிறது.