வித்தியா கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கின் முதலாவது(01) மற்றும் ஏழாவது(07) சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ,
02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார்
ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7 குற்றவாளிகளுக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 02, 03, 05, 06, 08 ஆம் இலக்க குற்றவாளிகள் தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக நான்கு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 04, 09ஆம் இலக்க குற்றவாளிகள் 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவின் குடும்பத்தினருக்கு, குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை காரணமாக அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரச தரப்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இன்று காலை 8.20 தொடக்கம் 8.28 வரையான நேரத்திற்குள் நீதிபதிகள் மேல் நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தனர்.

நீதிபதி மா.இளஞ்செழியன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

நீதிபதி மா.இளஞ்செழியனின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதியிலும் நேற்றிரவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 8.31-க்கு எதிரிகள் 9 பேரும் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் தனது குழுவினருடன் காலை 9.50 அளவில் மன்றுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து காலை 10.05 க்கு தீர்பாயம் கூடியது.

தீர்ப்பாயத்தின் தலைவரான வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், எதிரிகளுக்கு எதிரான 41 குற்றச்சாட்டுக்களையும் வாசித்து அவை தொடர்பில் தமது விளகத்தையும் வழங்கியுள்ளார்.

2015 மே மாதம் 13 ஆம் திகதி மாணவி வித்தியா காலை 6 மணிக்கு பாடசாலைக்கு சென்ற போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் 53 சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியங்கள் மற்றும் தீர்ப்பு தொடர்பில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் இணங்குவதாக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவு, கூட்டு வன்புணர்வு , கொலை, கூட்டு எண்ணம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலைச் சம்பவத்தின் கதாநாயகனாக சுவிஸ் குமார் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரை கட்டிவைத்து மக்கள் தாக்குதல் நடத்திய போது, இரவு 11 மணியளவில் அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”நீங்கள் சசியின் சகோதரனா” என சுவிஸ் குமாரிடம் வினவியதும், பின்னர் அவரை விடுவிக்குமாறு கூறியதும் நல்ல விடயம் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நகைப்பாகக் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்து தன்னைக் காப்பாற்றியமை தொடர்பில் சுவிஸ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளமையையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறனுடன் சுவிஸ் குமார் சென்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் முன்னிலையில் ஆஜராகியதாகவும் பின்னர் பொலிஸாரின் துர்நடத்தையால் அவர் விடுவிக்கப்பட்டமையும் சாட்சியங்களூடாகத் தெரியவந்துள்ளதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமக்கு எதிரான மென்பொருள் பொறியியலாளரின் சாட்சியத்தை சுவிஸ் குமார் மறுதலிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் குமாரின் மனைவியின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தமையையும் நீதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வௌிக்கொணர்ந்த போது, 10 மாதம் இருண்டு கிடந்த வழக்கை வௌிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா எனவும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குயிண்டஸ் பெரேரா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே வழக்கின் இழுத்தடிப்பிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது, ஒவ்வொரு பிரதிவாதிகளும் தனித்தனியாக தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!