திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை பெருவிழா - 2017

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை பெருவிழா - 2017

உலகம் உய்ய வேல் வடிவாக வந்து வெள்ளநாவல் மரத்தில் திருமுகன் வீற்றிருந்த புண்ணிய தலம் திருக்கோவில் ஆகும். வடக்கு முகமாக வீற்றிருந்த வேல் சுயமாகவே கிழக்கு முகமாகத் திரும்பியதால் திருக்கோவில் என்ற பெயர் ஏற்பட்டது. தம்பதிநல்லாள் என்ற சோழநாட்டு இளவரசியும் கணவனும் மகப்பேறு வேண்டி திருக்கோவில் தளத்தில் விரதம் இருந்து ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தனர். தம்பதி நல்லாள் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற இந்தியாவில் இருந்து செப்பனிடப்பட்ட கருங்கற்களையும் சிற்பாசாரியர்களையும் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக கந்தபாணத்துறைக்கு வரவழைத்து மூலஸ்தான கருவறையை கருங்கற்களினால் கட்டுவித்தாள். அவளது மகன் தனது தாயாரின் பெயரில் ஞாபகார்த்தமாக “தம்பதிவில்” என்ற குளத்தை அமைத்தான். அப்பெயர் மருவி தம்பிலுவில் என்று ஊரின் பெயராக மாறிற்று. தேசத்துக் கோவிலான இக்கோவில் பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி ஜூலை மாதம் 23ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற உள்ளதாக ஆலய பரிபாலன சபையின் கௌரவ தலைவர் திரு. சுந்தரலிங்கம் சுரேஸ் அவர்கள் தெரிவித்தார் .

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது ……..………
 • நாகர்முனை, கந்தபாணத்துறை, ஈழத்துச் திருச்செந்தூர் என்றும் இக்கோவிலை அழைப்பர்.
 • தேசத்துக் கோவில், திருப்படைக்கோவில், இந்து கலாசாரத்திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட கோவில், புனித யாத்திரை திருத்தலமாக 1952ம் ஆண்டில் இருந்து பிரகடணம் செய்யப்படும் கோவில் என்ற வகையில் சிறப்பு மிக்கது.
 • அரசர்களும் வன்னிமைகளும் தலைமை வகித்து வந்த இவ் ஆலயம் இன்று 1952.12.28ம் திகதி யாப்புக்கு அமைவாக நிருவாகம் செய்யப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து சபை உறுப்பினர்களும் வட்டாரப்பிரதிநிதிகளும் ஆலய நிருவாகத்தில் பங்காளிகளாக உள்ளனர். இவர்கள் பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
 • பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின் புனருத்தாரண திருப்பணி வேலைகளுக்காக 2015ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், எழுந்தருளிகள் வீதி உலாச் சுற்றும் திருவிழா நடைபெறாது. கொடியேற்றம், கொடியிறக்கம், தீர்த்தம் என்பன நடைபெறா விட்டாலும் வேதாகம விதிமுறைகளுக்கு அமைவாக விசேட பூசை வழிபாடுகளும் அடியார்கள் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கான வசதிகளும் கடந்த வருடத்தினைப் போன்று ஒழுங்கு செய்யப்படடுள்ளன.
 • மட்டுப்படுத்தப்பட்ட கிரியைகள் இடம்பெற்றாலும் வழமை போல் கடை வைப்பதற்கான நிலம் குத்தகை;ககு விடப்படும். தமிழரின் சமய சம்பந்தமான கலை நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் ஆலய நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 • திருவிழா உபயகாரருக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலய பரபாலன சபைத் தலைவர் திரு .சு, சுரேஸ் அவர்களின் தலைமையில் ஜூன் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசைப் பெருவிழாவைச் சிறப்பாகச் செய்வது பற்றிக் கலந்துரையாடித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 • ஆலயத்தின் ஊழியர்கள் தமது கடமைகளை கடந்த வருடங்களை விட இவ்வருடம் மேலும் சிறப்புறச் செய்து இப்பெருவிழாவை மெருகூட்ட வேண்டுமென பூசை உபயகாரர்களால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
 • பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்பவற்றின்; ஊடகவியலாளர்கள் திருக்கோவில் ஆலய நிகழ்வுகளை வெளிக்கொணர்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடரொளிப் பத்திரிகைகளும் சக்தி FM வானொலி, சக்தி தொலைக்காட்சி,  thambiluvil.info & Battinews இணையத்தளம் என்பன முதன்மை வகிப்பதை இட்டு அதிகாரச்சபைக் கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதற்கான தீர்மானம் எட்டப்படடுள்ளது.
 • திணைக்களங்களின் ஒருங்கிணைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. சிவ . ஜெகராஜன் தலைமையில் ஆலய பரிபாலனச் சபைத் தலைவரின் பிரசன்னத்தில் ஜூன் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து, பாதுகாப்பு , சுற்றுச் சூழல் பராமரிப்பு , வைத்திய உதவி, மின்னிணைப்பு முதலியவற்றுக்கான திணைக்களங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
 • வழமை போல் அன்னதானமும் ஆலய புணருத்தாரன வேலைகளுக்கு நிதி சேகரித்தலும் இடம் பெறும்.
 • கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் க.பொ.த(சா/தர)ம், க.பொ.த(உ.தர)ம் என்பவற்றில் பரீட்சைகளில் திறமை காட்டிச் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆலய நிருவாகத்தினரும் திருக்கோவில் மக்கள் வங்கியினரும் நிதி உதவி வழங்கி கௌரவிக்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை ஆலய உப தலைவரும், வண்ணக்கரும், பொருளாளரும், கணக்கப்பிள்ளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 • இறுதி நாளன்று நடைபெற உள்ள சமய சம்பந்தமான கலை நிகழ்வுகளை கௌரவ செயலாளர் ஒழுங்கு செய்து வருகின்றார்.
 • பூசை நிகழ்வுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முகம் மகேஸ்வர(ரகு) குருக்கள் அவர்களும், ஆலய குரு சிவஸ்ரீ அங்குச நாத (இராசையா) குருக்கள் அவர்களும் செயற்படுத்த உள்ளனர். 
 • திருக்கோவில் கிராமத்தில் உள்ள மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள், பாடசாலைகள், சமுர்த்திப் பயனாளிகள் ஆலய வளாகத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் சிரமதானப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
 • இவ்வருடம் கால்நடையாக கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் பெருமளவில் இங்கே தங்கிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திறப்பு விழா செய்யப்பட்ட “திருமூலர் திருமடம்”; கால்நடை யாத்திரிகர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என எதிர்பார்க்ப்படுகின்றது. 
 • இப்பெருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து, பொதுமக்கள் பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு, குடிநீர் கழிப்பறை வசதிகள், கடை வீதி ஒழுங்கமைப்பு, ஒலி,ஒளி சோடனை அலங்காரம் முதலான விடயங்களில் ஆலய நிருவாகத்தினர் ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையின் கௌரவ செயலாளர் தெரியப்படுத்தினார்.
அனைவரும் வருக. ஆறுமுகன் அருள் பெறுக.


Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
  Blogger Comment
  Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!