சமூர்த்தி உத்தியோகஸ்தரை தாக்கிய தந்தையும் மகனும் கைது

Share:
தம்பிலுவிலில் சமூர்த்தி உத்தியோகஸ்தரை துடுப்பு மட்டையால் தாக்கிய தந்தையும், மகனும் திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் நேற்று (14) புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் விநாயகபுரம் கிராமத்தைச்சேர்ந்த சமூர்த்தி உத்தியோகஸ்தர் இரா. பிரபாகரன் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவர் தற்போது காரைதீவு கிராமத்தில் வசித்துவருகின்றார்
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது...

புதன்கிழமை மாலை 4 மணியளவில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவிலுள்ள பல் தேவைக்கட்டிடத்தில் சமூர்த்திப் பயனாளிகளுக்கான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இங்கு பயனாளிகளின் தேவைகள், குறைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இவ் வேளையில் இக் கூட்டத்தில் திடீரென உள் நுழைந்த தந்தையும், மகனும் தமக்கு இதுவரை கடன் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்து துடுப்பு மட்டையால் சமூர்த்தி உத்தியோகஸ்தரை தாக்கியுள்ளனர்.
அங்கிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட உத்தியோகஸ்தர் உடனடியாக திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட இருவரையும் திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!