திருமூலர் திருமடம் திறப்பு விழா அழைப்பிதழ்

Share:

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் கிழக்கிலங்கையில் ஆடி அமாவாசைத் திதியில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூர்வீக புண்ணிய தலம் ஆகும்.இந்த ஆலய வளாகத்தில் அமரர் திருமதி.புஸ்பரதி கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் அமைவாக அன்னாரது குடும்பத்தினரால் நிருமாணிக்கப்பட்ட 'திருமூலர் திருமடம்' 2017.05.27ம் திகதி சனிக்கிழமை முற்பகல் சம்பிரதாய சமய மரபுகளுக்கு அமைவாக கோலாகலமான முறையில் திறந்துவைக்கப்பட இருப்பதாக ஆலய பரிபாலன சபைத் தலைவரும் திறப்பு விழாக்குழுத் தலைவருமான திரு.சுந்தரலிங்கம் சுரேஸ் அவர்கள் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, இந்திய நாட்டு இளவரசி தம்பதிநல்லாளும் அவரது கணவரும் மகப்பேறு வேண்டி தல யாத்திரை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தனர்.திருக்கோவில் வெள்ளை நாவலம்பதி வேல்முருகனின் அற்புதம் அறிந்து அங்கு வந்து வழிபட்டனர்.ஆண் குழந்தையொன்று முருகன் அருளால் மகப்பேறாகக் கிடைத்தது. மகிழ்வடைந்த தம்பதி நல்லாள் தன் தந்தையாருக்கு செய்தியை அறிவித்தாள். இந்தியாவிலிருந்து செப்பனிடப்பட்ட கருங் கற்களையும் சிற்பாசாரியர்களையும் கப்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டு வந்து கந்தபாணத்துறையில் கந்தப் பெருமானுக்கு கோவில் அமைத்தாள்.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட மூலஸ்தானக் கர்ப்பக் கிருகமும் அர்த்த மண்டபமும் இன்றுவரை உறுதியுடன் நின்று நிலைக்கின்றன.அதனைப் பேணிப் பாதுகாத்து பராமரிக்கும் செயற்றிட்டத்தில் தற்போதுள்ள ஆலய நிருவாகம் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டுவருகின்றது.

பெரிய கல்லாற்றைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு.விஸ்வலிங்கம் கனகலிங்கம் குடும்பத்தினர் திருக்கோவில் முருகன் மீது அதீத நம்பிக்கையும் பத்தியும் கொண்டவர்கள்.அடிக்கடி குடும்பத்தோடு சென்று முருகனைக் கும்பிட்டுவருவர்.பல வருடங்களுக்கு முன்னர் ஆடி அமாவாசைத் தீர்த்தம் ஆடிய பின்னர் மதிய வேளையில் மரநிழலில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.சாப்பிட்டு முடிவுறும் வேளையில் முருகப்பெருமான் தனது அற்புதத் திருவிளையாடல் ஒன்றை நடாத்தினார். மரத்தின் மீதிருந்த பறவைகள் எச்சமிட்டன.இதனை அவதானித்த புஸ்பரதி அவர்களின் மனதில் மடமொன்றின் அவசியம் உணரப்பட்டது.ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் அன்னதானம் சாப்பிடுவதற்கு தங்கள் குடும்பத்தினரின் சொந்தச் செலவில் மடமொன்று அமைப்பது பற்றிய விருப்பத்தை வெளியிட்டார்.மகன் ஐங்கரனும் கணவர் கனகலிங்கமும் குடும்பத்தினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.காலம் உருண்டோடியது.புஸ்பரதி இறையடி சேர்ந்தார்.புஸ்பரதியின் விருப்பமும் வேண்டுகோளும் ஐங்கரன், கனகலிங்கம் ஆகியோரின் ஆழ்மனதில் சிறியதோர் ஆலம் வித்தாக முளைவிட்டிருந்தது.
2013ம் ஆண்டு புதிய நிருவாகத்தினர் ஆலயப் பொறுப்பைக் கையேற்றனர்.ஆலயத்தில் பல அத்தியாவசியத் தேவைகள் இருப்பதை இனங்கண்டனர்.அவற்றை முன்னுரிமைப்படி வரிசைப்படுத்தினர்.அந்த வகையில் அன்னதான மடம் விஸ்த்தரிப்பு, கழிப்பறை வசதிகள் அதிகரிப்பு, ஆலய வீதியைச் சுற்றி மும்முனை மின்னிணைப்புப் பொருத்துதல், ஆலய வீதியில் நிழல் மரம் நடுதல், ஆலயத்துக்கு வரும் பாதைகளைச் செப்பனிடுதல், சுவாமியின் வயற் காணிகளைத் திருத்துதல்.பரீட்சையில் சாதனையீட்டிய மாணவர்களைக் கௌரவித்தல் முதலான செயற்பாடுகள் படிப்படியாக நிறைவேறின.உற்சவ காலங்களில் குடிநீர் வசதியும் தங்குமிட வசதியும் பற்றாக்குறையாக இருப்பதை நிவர்த்தி செய்ய பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.குடிநீர்த் தாங்கிக்கான வரைபடமும் உத்தேச செலவு மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன.அறப்பணி செய்யும் தனவந்தர்களைத் தேடும் படலம் ஆரம்பமானது.


அந்த வேளையில் முருகப் பெருமான் தலைவர் சுரேஸ் அவர்களுக்கு கனகலிங்கம் அவர்களை தொலைபேசித் தொடர்பு மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.அது நேரடிச் சந்திப்பாக மாறியது.கனகலிங்கம் மடம் கட்டுவதில் கருத்தூன்றியிருந்தார்.தலைவர் குடிநீரின் அவசியத்தை வலியுறுத்தி தனது கோரிக்கையினை முன்வைத்தார். நிருவாகத்தினருடன் கலந்துபேசி இரண்டு வேலைகளையும் ஐங்கரன் அவர்களும், கனகலிங்கம் அவர்களும் செய்வதாக முடிவு எட்டப்பட்டது.அதன்படி பத்தாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர்த்தாங்கி கடந்த வருடம் பொதுமக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.இவ்வருடம் திருமூலர் திருமடம் திருக்கோவில் முருகனின் பொதுச் சொத்தாக ஒப்படைக்கப்படுகின்றது.

திரு.ஐங்கரன் அவர்களுக்கும் செந்திரு அவர்களுக்கும் அவுஸ்ரேலியாவில் திறப்பு விழாவன்று திருமணம் நடைபெறுவதல் கனகலிங்கம் குடும்பத்தினர் திறப்பு விழா நிகழ்வில் நேரில் வந்து பங்குபற்ற முடியாத நிலையில் ஆலய பரிபாலன சபையினரும் பொது மக்களும் இணைந்து திறப்புவிழா நிகழ்வினைச் சிறப்புற ஒழுங்கமைத்துள்ளனர்.
இந்த திருமூலர் திருமடம் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுதல் வேண்டுமென்பது கட்டடத்தை நிருமாணித்தவர்களின் பேரவா ஆகும்.ஆலய பரிபாலன சபையினரும் அக்குறிக்கோளை உடையவர்களாக இருப்பதனால் இந்த மடத்தை பல்வேறு தேவைகளுக்கும் சேவைகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.


கல்விசார் நடவடிக்கைகள் :-

இக்கட்டடத்தில் அறநெறிப் பாடசாலையை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. (சா.தரம்), க.பொ.த.(உ.தரம்) என்பவைகளுக்கான இலவசக் கருத்தரங்குகள் நடாத்துவதற்கு இம்மண்டபம் வழங்கப்படும்.


கலை கலாசாரப் பணிகள் :-

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நடனம், கரகம், கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், நாட்டுக் கூத்து, நாடகம் முதலியவற்றை அரங்கேற்றம் செய்வதற்கு இம்மண்டத்தின் மேடை பயன்படும்.


சமயப் பணிகள் :-

இந்து மதம் சம்பந்தமான கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், சொற்பொழிவுகள். கருத்தாடல் களம் என்பவற்றுக்கு இம்மண்டபம் பயன்படும்.


வெளியீடுகளும் கௌரவிப்பும் :-

புத்தகம், இறுவட்டு முதலான வெளியீடுகளுக்கும் கல்விப்பணி, கலைப்பணி, அறப்பணி, திருப்பணி செய்த அறிஞர்கள,; புரவலர்கள், கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளுக்கும் இம்மண்டபம் பயன்படும்.


தங்குமிடம், அன்னதான மடம் :-

உற்சவ காலத்தில் தங்குமிடமாகவும் அன்னதான மடமாகவும் பயன்படும்.கதிர்காம யாத்திரிகர்களுக்கும் கல்விச் சுற்றுலா வரும் மாணவர்களுக்கும் தங்குமிடமாகவும் இது பயன்படும்.
கனகலிங்கம் குடும்பத்தினரும் இவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.தமது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினர்களாக அம்பாரை மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், அம்பாரை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான உயர்திரு துஷித வணிகசிங்க அவர்களும், விசேட விருந்தினராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு..விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருக்கோவில் பிரதேச செயலாளரும் இந்த ஆலய திருப்பணிச் சபையின் காப்பாளருமான திரு..ஜெகராஜன் அவர்களும், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு..பண்டார அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.திறப்பு விழா முடிவில் மதியவேளைக்கான அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தலைவர் தெரியப்படுத்தியுள்ளார்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!