சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் அமையவேண்டும்: சம்பந்தன்

Share:
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் 27.04.2017 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கங்களின் அழைப்பின்பேரில் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள இப் போராட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணர்வுகளையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் மதிக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவ் ஹர்த்தாலுக்கு மூவின சமூகங்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டபோதிலும் அதை இன்னமும் அரசு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், காணாமல் போனோருக்கு நீதி கோரிய போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்றும் இவ்விடயத்தில் அயராது உழைப்போம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!