குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்...

குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும்போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.


இன்றைய குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும், பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

பல மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு, தசைகள் பாதிப்படைகின்றன. மன நிம்மதி, தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பையும் தருகிறது.

சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ, கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி பெறுவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள்.

குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும்போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும், உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விடுகிறது.

ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. பொதுவாக பெற்றோர்களும், மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகின்றன. கருவிகளின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக ஆக்கிவிடுகின்றன.

இப்படி மொபைல்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ, பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.

உங்கள் குழந்தைகள் மொபைல், கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு அடிமை ஆகி உள்ளார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். செல்போனோ, டேப்லட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் நட்பாக இருக்க மாட்டார்கள்.

உரிய வயது வந்தபிறகும் சரளமாக பேச வராது. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உள்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள். ஒருவர் ஒரு நாளில் டி.வி. உள்பட எல்லா திரையுள்ள கருவிகளையும் 2 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும்.

அதற்கு மேல் பார்க்கக் கூடாது என்கிறது சமீபத்திய ஆய்வு. அதேபோல் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு பரிசாக எந்தவொரு திரையுள்ள கருவிகளையும் வாங்கித் தராதீர்கள், இது உங்கள் குழந்தைகளை மனவலிமை அற்றவர் களாக மாற்றிவிடும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!