குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் 6 தவறுகள்

Share:
குழந்தைகளை ஸ்மார்ட்டாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உள்ளது. குழந்தையை ஜீனியசாக வளர்ப்பதற்காக பெற்றோர் படும்பாடு வார்த்தைகளுக்குள் அடங்காது. பெற்றோரின் எண்ணங்களை விட இன்றைய குழந்தைகளின் வேகம் அதிகம். நவீன போன்கள், ஆன்லைன் தேடல் எல்லாவற்றிலும் பெற்றோரை விட அதிகம் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கு நல்லது சொல்கிறேன் என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்தால் காதுகள் மட்டுமே திறந்திருக்கும். மனதை இறுகச் சாத்திக்கொள்கின்றனர். அவர்களின் தவறுகளைக் கண்டுபிடித்து திட்டத் துவங்கினால் காதுகளுக்கும் சேர்த்து லாக் போட்டு விட்டு எதுவும் நடக்காதது போல் நகர்ந்து விடுகின்றனர். இத்தனை ஸ்மார்டான குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?


பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் அளிக்கிறார் சென்னைச் சேர்ந்த மருத்துவ மனநல நிபுணர் டாக்டர்.மனோஜ்.


1. கடுமையான வார்த்தைகள் பேசுவது!

வீட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்னையில் ஆரம்பித்து அலுவலகத்தின் தலைமை அதிகாரி வரை நிறைய சிக்கல்கள் பெற்றோருக்கு இருக்கலாம். “அவன் இருக்கான் பாரு..சரியான தொல்லை புடிச்சவன்”, என்று உங்கள் குழந்தை முன் பேசினால், வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிட்டாலும், அவர்கள் மனதில் பதியும். இதன்மூலம் தவறான உலகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடித்தவரை, குழந்தைகள் முன் மற்றவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சிக்க வேண்டாம்.


2. கேட்பதற்கு முன்பே வாங்கிக்கொடுப்பது!

பெற்றோர் பெரும்பாலும் செய்யும் தவறு இது! “என் பையன் கேட்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்துடுவேன்”, “என் மகள் அடம்பிடித்ததே இல்லை”, என்று கூறும் பெற்றோர்களா நீங்கள்? ஏனெனில், உங்கள் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.


3. விமர்சனங்களை வன்முறையாக மாற்றுவது!

உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களை அடிப்பது, சத்தமாக திட்டுவது போன்ற செயல்களை அறவே நிறுத்துங்கள். அப்ப, எப்படித்தான் திருத்துறதாம் என்றால்... பக்குவமாக எடுத்துச் சொல்லுஇவதைவிட வேறு வழி கிடையாது. விமர்சனத்தை வன்முறையாகக் காட்டினால், குழந்தைகள் மனதில் வாழ்க்கைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் எழும்.


4. ஊட்டி வளர்ப்பது!

குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப, அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வைப்பது பெற்றோரின் கடமையே. 10 வயது வரையிலும், உங்கள் குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான பெற்றோர் வளர்ப்பு ஆகாது. எப்போதும் அவர்களை பெரியவர்களாக உங்களுக்குச் சமமாக நடத்துங்கள். குட்டி குட்டி வேலைகள் கொடுத்து தட்டிக் கொடுங்கள். பொறுப்புகளைக் கற்றுக் கொடுங்கள்.


5. அவர்களுக்கான விஷயங்களை நீங்களே தேர்ந்தெடுப்பது! 

குழந்தைகள் தங்களின் ஆறு வயது வரை என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்களோ, அந்த விஷயங்கள்தாம், அவர்கள் மனதில் இறுதிவரை ஆதிக்கம் செய்யும். அதனால், அவர்களின் தேவைகளுக்கு அவர்களே தீர்வு காண விட்டுவிடுங்கள்; அதில் அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை! இதன்மூலம், தாமாகவே முடிவெடுக்கும் பண்பை குழந்தைகள் வளர்ந்துக்கொள்ள உங்கள் செயல்கள் உதவட்டும்.


6. நேரம் ஒதுக்காமல் இருப்பது!

இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வாரநாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் தலை சாய்க்காமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!