சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது நாசா: மூன்று மர்ம முடிச்சுக்கள் அவிழுமா?

அடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.


விண்கலத்தை அனுப்பி சூரியனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள மூன்று மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரியனை ஆய்வு செய்ய ஏற்கனவே விண்கலங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு பயணிக்கவுள்ள விண்கலம் மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி லைவ் சைன்ஸ் இதழில் நாசா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

"சூரியனை நோக்கிய எங்களது முதல் ஆய்வு இது. நிலவைப் போலவோ, செவ்வாய் கிரகத்தைப் போலவோ இந்த ஆய்வில் சூரியனின் மேற்பரப்பிற்கு சென்று எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இதுவரை இல்லாத நெருக்கத்திற்குச் சென்று, அதாவது தகிக்கும் சூரியனை எந்த அளவுக்கு தாங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கிச் சென்று எங்களது விண்கலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது. இதன்மூலம், இதுவரை விடை காண முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும். சூரியனின் மேற்பரப்பைவிட அதன் வளிமண்டலம் எவ்வாறு பன்மடங்கு வெப்பத்துடன் காணப்படுகிறது, சூரியனின் மேற்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அக்கினிப் புயலைத் தூண்டுவது எது, விண்வெளியில் மிதக்கும் விண்கலங்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த துகள்களை சூரியன் அவ்வப்போது வெளியிடுவது எப்படி ஆகிய கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வந்தது. எங்களது ஆய்வின்மூலம், இவற்றுக்கான விடை கிடைக்கும் வாய்ப்பு முன்னெப்போதையும்விட மிக அதிகமாக உள்ளது."

என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 1,370 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய திறனை விண்கலத்திற்குத் தரும் 11.4 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட கரிமக்கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர்.

மேலும், வெப்பத்தால் பாதிப்படையக்கூடிய ஆய்வுக் கருவிகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய குளிரூட்டிக் குழாய்களையும் தயாரித்துள்ளனர்.

நாசாவின் இந்தத் திட்டத்துக்கு “Solar Probe Plus” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விடை தெரியாத மூன்று மர்மங்களாவன…

1. குளிர் சூரியன்

சூரியனின் வளிமண்டலத்தைவிட அதன் மேற்பரப்பு குளிர்ந்து காணப்படுவதுதான் விஞ்ஞானிகளுக்கே விந்தையாக இருந்து வருகிறது. சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ்தான். ஆனால் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலை 20 இலட்சம் டிகிரி செல்ஷியஸ். பூமியின் மேற்பரப்பை விட்டு உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சூரியனின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பது ஏன் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்!

2. சூரியப் புயல்

சூரியனிலிருந்து சக்திவாய்ந்த துகள்பொருள்கள் அனைத்து திசைகளிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயலின் வேகம், மணிக்கு பல இலட்சம் கிலோ மீட்டர்கள். இவ்வளவு உக்கிரமாக வீசும் இந்தப் புயலைத் தூண்டுவது எது என்பதற்கு எந்த விஞ்ஞானியாலும் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.

3. மர்மக் கதிர்வீச்சு

சூரியனிலிருந்து அவ்வப்போது ஒருவகையான சக்திவாய்ந்த கதிர் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். அந்தக் கதிர்கள் ’எக்ஸ்ரே’ போன்று ஊடுருவும் தன்மை கொண்டவை. தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால், விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கலங்களுக்கும் அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கும் அந்தக் கதிர்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கதிர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு விடை தெரியா கேள்வியாகவே இருந்து வருகிறது.

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!