இன்று மகா சிவராத்திரி விரதம்- மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் சிவபெருமான். நாம் அறிந்தோ, அறியாமலோ பிற உயிர்களுக்கு சில தீங்குகளை செய்கிறோம். அதன் காரணமாக நமது பாவக் கணக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் இருக்கும் எந்த உயிருக்கு தீங்கு விளைவித்தாலும் அது இறைவனுக்கு இழைக்கும் தீங்காகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பாவங்களை களைவதற்கும் இறைவன் நமக்கு வாய்ப்பு தருகிறார்.

புண்ணிய நதிகளில் நீராடுவது, தீர்த்த யாத்திரை, தல யாத்திரை போன்றவை இதுபோன்ற பாவங்களை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுபவையே. ‘அப்படியானால் பிற உயிர்களை துன்புறுத்திவிட்டு, புனித நீராடினால் பாவம் போய்விடுமா?’ என்று கேட்பது சரியான புரிதல் அல்ல. இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் சமமானவை, அவைகளுக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை இருக்கிறது என்பதை உணர்தலே சரியான புரிதல். இனியாவது பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுப்பதே முக்கியமானது. நாம் செய்யும் பாவங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் ஒரு நாள்தான் சிவராத்திரி.

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.

அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அங்கப்பிரதட்சணமாக வலம் வரக் கூடாது. சுவாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக்கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை...

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை): சுவாமிக்குப் பஞ்ச கௌவியத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியா வட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.

அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழை களுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை

செய்ய முடியாதவர்கள்...

கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்ளலாம். சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச்சொல்லி, கேட்கவோ வேண் டும்.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம். நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும். என் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன் என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும். எங்கும் நிறைந்திருக்கும் இறையாற்றலை எளியோரும் உணரும் அற்புத தினம்! மஹாசிவராத்திரி அனைவருக்குமே வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும். வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம். ""மஹா சிவராத்திரி இரவு வெறுமனே விழித்திருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வு தரும் இரவாகவும் ஆன்மிகத்தின் முழுப்பரிமாணத்தையும் உணர உறுதுணையாக இருக்கும் இரவாகவும் அமையட்டும்.

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி...

(நன்றி- வீரகேசரி)
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!