திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வளாகத்தினுள்ளும் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் பரபரப்பு

 கிழக்கு கரையோரம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் திருக்கோவில் போன்ற பகுதிகளுள் 11.12.2016 ஞாயிறு இன்று அதிகாலை  சுமார் 200மீட்டர் தூரம் வரை கடல் நீர்உட்புகுந்துள்ளது.  வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஸ்ரீ திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வளாகத்தினுள்ளும்  கடல் நீர்  உட்புகுந்துள்ளது.

   இதனை அடுத்து மக்கள் பரபரப்புடன் சுனாமியென்று பயந்து ஓடியுள்ளனர். ஆலய சூழலில் மண் புழுக்கள் இறந்து காணப்பட்டன. ஆலய ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ஸ்தலத்திற்கு விரைந்து ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடி சேத விபரங்களைப் பார்வையிட்டார்.

அங்கிருந்த மீனவர்களது வலை மற்றும் தோணிகளும் வெகுவாக சேதமடைந்திருந்தன மீனவர் சங்கத் தலைவர் கே.ஜெயசிறில் கூறுகையில், நாம் புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தையோ புதிய பாதையையோ கேட்கவில்லை. இருக்கின்ற எமது ஆலயத்தையும் மக்களையும் காப்பாற்ற தடுப்பு கல் வேலி அமைத்துத் தாருங்கள். ஆலயத்தின் அருகிலுள்ள தென்னந் தோப்புக்குள்ளும் கடல்நீர் புகுந்துள்ளது.

அதன் முன்னாலுள்ள கடற்கரைப் பரப்பில் இரண்டுக்கு மேற்பட்ட தென்னைகளை கடல் காவு கொண்டுள்ளது. மேலும் பல தென்னை மரங்களை அரித்து உள்ளெடுத்து வருகின்றது. ஆலயத்தினுள் அண்மையில் நடப்பட்ட காயா மரங்களனைத்தும் கடல் நீர் உட்புகுந்த காரணத்தினால் சேதமாகியுள்ளன அங்கு மண் புழுக்கள் இறந்து காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்

ஆலயத் தலைவர் சு.சுரேஸ் அங்கு கூறுகையில், "கடல் நீர் பெருக்கெடுத்து எமது ஆலயத்தினுள்ளும் புகுந்துள்ளது. நாம் அண்மையில் நாட்டிய மரக் கன்றுகள் பாதிக்கப்பட்டுள்ளன.அது மட்டுமல்ல மீனவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலய தீர்த்தமாடும் பிரதேசம் கடலினுள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது.,இங்கே வலுவான கற் சுவர் அமைத்தால் மட்டுமே பழம் பெரும்  ஆலயத்தையும் ஊரையும் காப்பாற்றலாம் எனத் தெரிவித்தார்." அவர்களின் வேண்டுகோளினைக் கேட்ட கோடீஸ்வரன் எம்.பி. பதிலளிக்கையில், குறித்த தடுப்புச் சுவர் நிர்மாணத்திற்குப் பல கோடி ரூபா செலவாகும். என்றாலும் நான் முயற்சி செய்கின்றேன் எனக் கூறினார்.


இதன் போது ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,வண்ணக்கர் வ.ஜெயந்தன், பொருலாளர் எஸ்.லோகநாதன் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்தில் சமூகமளித்திருந்ததுடன் மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!