வரவு- செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 107மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Share:
தேசிய அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் பதிவாகியிருந்ததுடன் 07 பேர் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்கவி ல்லை. வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 16 பேரும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேநேரம், ஜே.வி.பியின் உறுப்பினர்கள் 06 பேரும், எதிரணியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் (மஹிந்த அணி) சேர்ந்தவர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.
எதிரணியிலுள்ள எம்பிக்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, முத்து சிவலிங்கம் ஆகியோர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வே வாக்களித்தனர்.

தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க கடந்த 10ஆம் திகதி சபையில் சமர்ப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 11ஆம் திகதி இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. கடந்த வருடத்தைவிட இம்முறை இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்துக்கு குறைவான நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆறு நாட்கள் மாத்திரமே விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பதிலளித்து உரையாற்றியிருந்தார். மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு அமைய கோரம் மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொருவருடைய பெயரை அழைத்தபோது அவர்கள் எழுத்து தமது வாக்குகளை அளித்தனர்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். எனினும் அவர் சபா மண்டபத்தினுள் வரவில்லை.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இலத்திரனியல் மூலமாக வாக் கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்திருந்தபோதும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கை விரலடையாளத்தை வழங்கியிருக்காத காரணத்தினால் வழமையான முறையில் வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது
இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இன்று (19) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகிறது. எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெறும். இன்றையதினம் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 23 அமைச்சுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் நடைபெறும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியிருக்கும் தேசிய அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் இரண்டாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். 'சகல சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி' என்ற தொனிப்பொருளில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!