மஹா சிவராத்திரி விரதமும் அதன் சிறப்புகளும்..

அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள்இ மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம் நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம்இ மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.

சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால்,இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவராத்திரியின் சிறப்புகள்:
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை சப்தமி தேய்பிறை அஷ்டமி  என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும் இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால் சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும்.

ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:

நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.

மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.

சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்.

1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம

சிவராத்திரியின் நான்கு காலங்களில் பஞ்ச வில்வங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது மூன்றாவது காலமான லிங்கோற்பவ காலத்திலேனும் பஞ்ச வில்வங்களைக் கொண்டு பஞ்சமுகார்ச்சனை செய்யலாம். லிங்கோற்பவ காலத்தில் தான் சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு அருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்தார்.  மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி  வெந்நீரால் அபிஷேகம் செய்து எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி.சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றுள்ளனர். விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.

சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை:
மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர் மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல் உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கி  சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில்  பிரபு இவன் கடைசிக்காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான்.  மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன்  அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.

விரதமுறை: சிவராத்திரி அன்று பகலில் சாப்பிடாமல் இருந்து  முழுமுழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும். அன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். இவ்வேளையில் சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து  ஐந்தெழுந்து மந்திரமான ஓம்நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பலன்:
 மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, சோம்பல் ஆகிய குணங்களை வென்று  நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment