'சமூகத்தின் பலமும் பலவீனமும் கல்வியே'

Share:
ஒரு சமூகத்தின் பலமும் பலவீனமும் கல்வியே. கல்வியை கற்பதும் கற்றதை மாணவர்களுக்கு ஒப்புவிப்பதும் ஆசிரியர்களின் பணியென அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்தில் சனிக்கிழமை 2015.11.14 இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'எமது சமூகத்திடம் எஞ்சியுள்ள மிகவும் பலமான ஆயுதம் கல்வி மாத்திரமே. அவ்வாறான பலமான கல்வி எனும் ஆயுதத்தை கற்பிக்கும் ஆசிரியர்களே சமூகத்தின் வழிகாட்டிகள். இவ்வாறான சிறந்த வழிகாட்டிகளே இன்று எமக்கு தேவையானவர்களும் அவர்களே எமது சமூகத்தின் முதுகெலும்பும் அவர்களே. மேலும் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அதிகரிப்பதினாலோ அல்லது அழகுபடுத்துவதினாலோ கல்வியை வளப்படுத்த முடியாது. சிறந்த கற்பித்தல் மூலம் மாத்திரமே கலை, கலாசாரம், பொருளாதாரம் போன்றவைகள் வளர்ச்சியடைவதுடன் எமது பாரம்பரிய விழுமியங்களும் பாதுகாக்கப்படும்' என்றார்.