Thursday, August 13, 2015

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பிரச்சார நடவடிக்கைகளில்ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

(ஹுஸைன்)

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.




இந்த அறிவிப்பைச் செய்துள்ள  தேர்தல்கள் ஆணையாளர், பகிரங்க கூட்டங்களுக்கு மேலதிகமாக வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டல், துண்டுப் பிரசுரங்கள் பகிர்ந்தளித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளல், ஊடகங்கள் ஊடாக விளம்பரங்கள் செய்தல் போன்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இக் காலப்பகுதிக்குள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேட்பாளர்களையும் கட்சிகளையும், ஆதரவாளர்களையும் கேட்டுள்ளார்.

அத்துடன், வேட்பாளர்களால் தத்தம் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் 15 ஆம் திகதி அகற்றப்படவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் குறிப்பாக 8 மணிக்குப் பின்னர் வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு, தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்து க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் நிமித்தம் வாக்களிக்கத் தவறிய கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி வரை அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.