நம்ம ஊரின் கல்வி நிலைமை ?? உயர்தர பெறுபேறுகள் – என்ன தான் நடக்கிறது?

(பிறகு வாசிப்போம் என நினைக்காமல் ஓரிரு நிமிடம் இருந்து வாசியுங்கள் )
முதலில் இது ஒரு விமர்சனக் கட்டுரை என்றவகையில், தனிப்பட்ட ரீதியில் எவரையும் குறிப்பிடவில்லை என்பதைப் பணிவுடன் கூறிக்கொண்டு, இதில் கூறப்படும் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தினால் தயைகூர்ந்து மன்னிக்குமாறும் வேண்டிகொள்கிறேன்.
பொதுப் பரீட்சை ஒன்று நிகழ்ந்து பெறுபேறுகள் வெளியான பின், வழக்கம்போல நம் வலைத்தளத்தில் பிரசுரிப்பதற்காக க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை விசாரித்தபோது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இவ்வருடம் நமது பிரதேச பெறுபேறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையாம்!!
இவ்வருடம் பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு யாருமே தெரிவாகவில்லை!
என்னதான் நடக்கிறது?

கடந்த சில வருடங்களாக உயர்தரப் பெறுபேறுகள் மிக மோசமாக வீழ்ச்சிகண்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோராண்டும் தவறாமல், குறைந்தபட்சம் ஒவ்வொரு மாணவர்களையேனும் மருத்துவ - பொறியியல் பீடங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தது நமது பிரதேசம்.
தொழிநுட்ப முன்னேற்றமும் வசதி வாய்ப்புகளும் அதிகரித்துவிட்ட இக்காலகட்டத்தில், பத்து வருடங்களுக்கும் மேலாக, இவ்வெண்ணிக்கை மாறாமல் பீடத்துக்கு ஒவ்வொன்று என்ற எண்ணிக்கையுடனே நின்றுவிட்டது என்பது அவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல என்றாலும், இந்த வருட நிலை மிகுந்த வெட்ககரமானது.
விஞ்ஞானப்பிரிவுக்கு மாத்திரமல்ல, கலை – வர்த்தகப் பிரிவுகளிலும் இதேநிலைமை தான்! அவற்றில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்தவருடங்களை விட கணிசமான அளவு சரிவுகண்டிருக்கிறது.
ஆனாலும், இன்று வரை, தனியார் வகுப்புகளுக்காக கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் பஸ் ஏறும் மாணவர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை. பாடசாலையில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி மட்டக்களப்பு – கல்முனை பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துவிடும் போக்கும் மாறவில்லை. அவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே படிக்கிறார்கள் – எத்தனை பேர் சித்தியடைகிறார்கள் என்ற ஆராய்ச்சியை விட, ஊரிலேயே கற்று அவர்களால் ஏன் சித்தியடையமுடியாது என்ற ஆராய்ச்சி பயன் தரக்கூடியது.
பத்து வருடங்களுக்கு முன், வெளியூருக்குத் தனியார் வகுப்புக்குச் செல்லாமலே, தன் சொந்தமுயற்சியில் கற்று மருத்துவ பீடம் சென்று காட்டிய மாணவர்கள் இருக்கிறார்கள். கேட்பதை அடுத்த நிமிடம் தரக்கூடிய இணையத்தை விரல்நுனியில் வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய மாணவ சமுதாயத்தால், அவ்விலக்கை சிறிதுகூட அடையமுடியவில்லை என்பது எவ்வளவு மானக் கேடு?
எங்கோ தவறு நடக்கின்றது! அந்தத் தவறுக்கான ஆணிவேரைக் கண்டு முளையிலேயே பிடுங்கியெறியவேண்டும்!
இந்தக் காலத்தில், கல்வி என்பது ஒரு சமூகத்தின் அபிவிருத்திச் சுட்டெண்ணாகத் தான் கணிக்கப்படுகிறது. கல்வியில் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறோமோ அந்த அளவுக்கு நம் சமுகமும் முன்னேற்றம் கண்டதாகக் கணிக்கப்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
உங்களில் பலர், தவறு இங்கேதான் நடக்கிறது என்று பாடசாலையைச் சுட்டிக்காட்டலாம். பாடசாலை என்பது அதிபர் – ஆசிரியர் – மாணவர் இணைந்த கட்டமைப்பு என்ற மாயையிலிருந்து வெளிவாருங்கள்! பாடசாலை என்ற எந்திரத்தை இயக்குவதே சமுகமாகிய நீங்கள் தான்!
நீங்கள் படித்தது – இன்றைக்கு உங்கள் பிள்ளை படிப்பது – நாளைக்கு உங்கள் பேரப்பிள்ளை படிக்கப்போவது அதே பாடசாலையில்தான்! பெற்றார், நலன்விரும்பிகள் என்ற ரீதியில் பாடசாலையொன்றில் உங்கள் பங்கு மகத்தானது. தவறு நிகழ்கிறதென்றால், அந்தத் தவறை எந்த வழியில் தீர்க்கலாம் என்று சிந்தித்து அதைச் செயற்படுத்துங்கள்! நீங்கள் நினைத்தால் பாடசாலையை அடியோடு மாற்றிக்காட்டமுடியும்!
இன்னும்சிலர் நமது பிரதேசம் வளங்கள் குறைவான பின்தங்கிய பிரதேசம் என்று கூறலாம். நிச்சயமாக இல்லை! எனக்குத் தெரிந்தவரை, கிழக்கிலங்கையில் அதிகளவு பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் நமது கிராம இளைஞர்களும் முன்னணியில் இருக்கிறார்கள். (அவர்களில் பெரும்பாலானவர்கள் எதற்காக பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தனியே ஆராயவேண்டியது.)
இப்படி இணையவசதி முற்றாக வியாபித்துவிட்ட ஒரு கிராமத்தை வளப்பற்றாக்குறை கொண்ட – வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமம் என்று எந்த ஆதாரத்துடன் கூறுவது?
வளப்பற்றாக்குறை என்பது ஒரு காரணமே இல்லை என்பதற்கான இன்னொரு உதாரணம் உயர்தரப் பெறுபேறுகளுக்கு நேர்மாறாக, புலமைப்பரிசில், சாதாரணதர பெறுபேறுகள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. நகர்ப்புறப் பாடசாலைகளை விட, நமது பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக இருக்கின்றன.
புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின், அந்த மாணவர்களின் திறமை எங்கே சென்று விடுகிறது? அல்லது பெற்றோர் - ஆசிரியர்கள் அதன் பிறகு கவனியாது விட்டுவிடுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.
புலமைப்பரிசில், சாதாரணதரம் என்பவற்றோடு உயர்தரத்தை ஒப்பிடமுடியாது என்பதையும், மூன்றினதும் கல்வி அடிப்படை ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஐந்தாமாண்டிலும் பதினோராமாண்டிலும் முதலிடத்தில் நின்ற மாணவர்கள், உயர்தரத்தில் சித்தியடையமுடியாது எங்கோ ஆழத்தில் வீழ்ந்துகிடப்பதையும் இன்று நம்மால் காணமுடிகிறது.
ஆனால், ஐந்தாமாண்டில் பிரகாசித்த ஒரு மாணவன், அதே சிந்தனை ஆளுமையுடன் இன்னும் எட்டாண்டுகள் வளர்த்தெடுக்கப்படுவானாயின், அவனால், உயர்தரத்திலும் சாதிக்கமுடியும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்தக் கடமை அவனைச் சுற்றியிருக்கும் பெற்றார் – ஆசிரியர் என்ற சமூகத்துக்குரியது.
இங்கே சமூகம் என்று சுட்டிக்காட்டுவது இங்குள்ளவர்களை மட்டுமல்ல!  புலம்பெயர் நம்மவர்களையும் சேர்த்துத்தான்!
காரைதீவு, களுவாஞ்சிக்குடி போன்ற கிராமங்களின் கல்விவளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. புலம்பெயரிகள் அனுசரணையில், அங்கெல்லாம் ஊருக்கொரு பெரிய கல்விக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. தம் சக்திக்கேற்ற வகையில் அனுபவமுள்ள ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் இலவசமாகக் கற்கிறார்கள்.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள பிரபல பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவகங்களின் மாதாந்தப் பரீட்சை வினாத்தாள்கள் உடனுக்குடன் வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்குப் பரீட்சை வைக்கப்பட்டு, பெறுபேறுகள் உடனுக்குடன் அறிவித்தல் பலகையில் தொங்குகின்றன. பரீட்சைகளில் திறமை காட்டும் மாணவர்களுக்கு அன்பளிப்புகள் கிட்டுகின்றன. குறிப்பிட்ட கால இடைவேளையில் பெற்றோரும் கல்விக்கூட நடத்துநர்களும் கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்கள். இறுதிப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்ததும், சித்தியடைந்தவர்கள் விழாவெடுத்துப் பாராட்டப்படுகிறார்கள்.

இப்படியொரு கல்விக்கட்டமைப்புக்குள் நமது கிராமங்களையும் ஏன் கொண்டுவர முடியவில்லை?
கடந்த மூன்று வருடங்களாக பரீட்சை எழுதிய வகுப்பு மாணவர்கள் எல்லாருமே கெட்டிக்கார அணியினர் (Batch) என்று பெயர்பெற்றிருந்தும் தம்மால் சாதிக்கமுடியாமற் போனதற்குக் காரணம், ஊரிலேயே கற்ற தங்களுக்கு சரியான கல்வி அடித்தளம் கிடைக்காமற் போனதே என்று ஆதங்கப்படுகிறார்கள்.
அறிவுரைகள் எப்போதும் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். அதை நடைமுறையில் கொண்டுவராமல் காரியமில்லை.
இறுதியாக ஒரு வேண்டுகோள்!
உயர்தரம் கற்கும் – கற்க இருக்கும் அன்பான சகோதர சகோதரிகளே!
பலர்முன்னிலையில் நீங்கள் ஒரு தவறிழைக்கும்போது, அங்கு முதலாவதாக எழும் கேள்விகள் “உன் அப்பா அம்மா யார்?” “நீ படித்த பள்ளி எது” என்பதுதான்!
நீங்கள் தனிநபர்கள் இல்லை!
நீங்கள் உங்கள் பெற்றோரின் பிரதிநிதிகள்!
உங்கள் பாடசாலையின் பிரதிநிதிகள்!
மொத்தத்தில்
நம் சமூகத்தின் பிரதிநிதிகள்!
நீங்கள் படைக்கும் ஒரு சாதனை, உங்களுக்கு மட்டுமல்ல! உங்கள் பெற்றோருக்கும், பாடசாலைக்கும், இந்த மொத்த சமூகத்துக்குமே பெருமை தேடித் தருகிறது!
இருபது வயதில் உங்களுக்கு கலக்சியும் ஐபோனும் அவசியம் இல்லை! பேஸ்புக்கும் இணையமும் எங்கோ ஓடிவிடப்போவதில்லை. அவை பிரதானமான கவனக்கலைப்பான்கள். கொஞ்ச காலத்துக்கு – இந்த ஏ.எல் இரண்டு வருடங்களும் பல்லைக் கடித்துக்கொண்டு படியுங்கள்! அதற்குப் பிறகு கிடைக்கும் ஆறுமாதம் நீங்கள் இழந்ததெல்லாவற்றையுமே அடையலாம்.
உங்களால் முடியாது என்றில்லை! நிச்சயம் முடியும்!
மாணவச் செல்வங்களே!
கிழக்கிலங்கையில் கல்விக்குப் புகழ்பெற்ற ஊர்களின் பட்டியலில் நமது கிராமத்தின் பெயரும் ஒரு காலத்தில் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில், நம் அம்மம்மா – அப்பம்மாமார், சமூகத் தடைகளை உடைத்தெறிந்து கல்விகற்று, அவர்களை மணந்த வெளியூர் மாப்பிள்ளைகளை விட அறிவாளிகளாக இருந்தமையால், தம்பிலுவில் பெண்களுக்குக் கிடைத்த அவப்பெயர் இன்றுவரை தொடர்கிறது.
அந்த வீண்பழிக்கு, இன்றைய தலைமுறையான நாம், நம் கல்வியால் தான் பதில்சொல்லவேண்டும்!
நீங்கள் முதல்தடவையோ இரண்டாம் தடவையோ தோற்றிருக்கலாம். இன்னும் ஒரு சந்தர்ப்பமாவது உங்களுக்கு உள்ளது. அதைச் செவ்வனே பயன்படுத்தி வெல்லுங்கள்!
ஒரு பிரபல உயர்தர ஆசிரியர் அடிக்கடி சொல்வார்:
“கெட்டித்தனத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். ஐந்தாமாண்டும் பதினோராமாண்டும் வென்றால் நீங்கள் கெட்டிக்காரர். ஆனால் புத்திசாலி என்று நிரூபிக்கவேண்டுமானால் நீங்கள் உயர்தரத்தில் வென்று காட்டவேண்டும்.”
ஆங்கிலத்திலும் அழகான பொன்மொழி ஒன்று இருக்கிறது.
“No one can motivate you if you are not willing to do yourself!”
இதை எப்போதும் மனதில் வைத்து உங்கள் முழுப்பலத்தையும் இந்தப் பரீட்சையில் காட்டுங்கள்! நீங்கள் யாரென்று இந்த சமூகத்திற்குக் காட்டுங்கள்! நம் சமூகம் யாரென்று உலகத்திற்குக் காட்டுங்கள்!
என் இந்த மனக்குமுறல்கள், என் கிராமத்திற்கும் வெளியே, என் பிரதேசத்திலும், அயல் கிராமங்களிலும், இதைப் படிக்கும் வெளியூர் குடிமகன் ஒருவரின் மனதிலும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துமாயின், அதையே நம் இலங்கைத்தமிழ்ச் சமுதாயத்திற்கு நான் செய்த பெரும்பணியாக எண்ணி உளமகிழ்கிறேன்.
2013 பரீட்சைப் பெறுபேறுகள் என் ஆதங்கத்தைத் தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
Share on Google Plus

About Thambiluvil Thirukkovil

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment