Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்)

BY- Thulanch Viveganandarajah   பகுதி ஒன்றை வாசிக்காதவர்கள்  இங்கே  சென்று வாசியுங்கள் - தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு - பக...

BY-Thulanch Viveganandarajah 


பகுதி ஒன்றை வாசிக்காதவர்கள்  இங்கே  சென்று வாசியுங்கள் -
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு - பகுதி - 1
இந்த கட்டுரையின் தொடர்சியே இது ..
தம்பிலுவில் கண்ணகி அம்மனின் விழாக்கள், அவற்றின் பெருமை என்பவற்றை சொல்வதற்குமுன் முக்கியமான ஒன்றைக் கூறியாக வேண்டும்.


 கிழக்கிலங்கை மக்களின் நெறி, தூய தொன்றமிழ் (தொல்தமிழ் - திராவிட) நெறி. பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு உள்ளான தமிழகம், நாவலரால் வைதீகநெறிக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட யாழ்மண் என்பன போலன்றி, மட்டக்களப்பு மாநிலத்தில், தொன்றமிழ் நெறி, தன் தனித்துவத்தைப் பெரிதும் பேணி வந்திருக்கிறது. இதற்கு அதன் தனித்துவமான புவியியலமைப்பும் ஒரு காரணம் எனலாம்.

 மட்டக்களப்புச் சைவநெறியில், வைதிக நெறியின் கலப்பு மிக மிகக் குறைவு அல்லது இல்லை எனலாம். சங்க இலக்கியங்கள் சுட்டும் சமயநெறியை ஒத்ததாகவே இங்கு நிலவும் சைவநெறி காணப்படுகிறது. கண்ணகி ஆலயங்களில் இடம்பெறும் "கல்யாணக் கால் நடுதலி"ல் "கந்தழி வழிபாடு", தெய்வமாடுதலில் "வேலன் வெறியாட்டு", பத்ததி முறைச் சடங்குகளில் ஓதப்படும் தமிழ் மந்திரங்கள், அரிவையரின் குரவையொலியாய் எஞ்சி நிற்கும் குரவைக்கூத்து, மலையாளத்தில் மட்டும் வாழும் சில சங்கத்தமிழ்ச் சொற்கள் இங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றமை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 தம்பிலுவில் கண்ணகை அம்மன் பற்றிய கட்டுரையில், வைதீகநெறிக்கு என்ன சம்பந்தம் என்று நீங்கள் எண்ணலாம்! நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது!! 

இன்று பெரும்பாலான ஆலயங்கள் வைதீகமயமாகி விட்டாலும், சில ஆலயங்களில், குறிப்பாக, பெரும்பாலான அம்மன் ஆலயங்களில், தூய தொன்றமிழ் முறையிலமைந்த பத்ததி அல்லது சடங்கு முறை வழிபாடே இன்றும் இடம்பெறுகிறது. தம்பிலுவில் அம்மன் ஆலயமும் அவ்வாறே! 

சமீபகாலமாக, தெரிந்தோ தெரியாமலோ - விரும்பியோ விரும்பாமலோ, இங்கும் வைதீகநெறியின் ஆதிக்கம் படரத் தொடங்கியிருக்கிறது. 2000ஆமாண்டளவில் இந்த மடாலயத்தில் நிகழ்ந்த கும்பாபிடேகமும், தற்போது வருடாவருடம் இடம்பெற்று வரும் சங்காபிடேகமும், ஆகமவிதிப்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் மற்றும் நாகதம்பிரான் சன்னதிகளும் இவ்வாதிக்கத்தின் தெளிவான வெளிப்பாடுகள்! 

எதிர்காலத்தில், ஆலயத்தில் கர்ப்பக்கிரக விமானம் எழுந்து, கப்புகனாரும் – தம்பிலுவில் அம்மன் காவியமும் தவிர்க்கப்பட்டு, சிவாச்சாரியார் ஒருவர், வடமொழியில் “ஸ்ரீ நேத்ராபரணா அம்பிகா(?!) அஷ்டோத்ர சத நாமாவளி” ஓத ஆறுகாலப்பூசை நிகழ்ந்தாலும் வியப்பதற்கில்லை!

 எனவே எப்பாடுபட்டாகிலும், ஆலயம் வைதீகமயமாதலைத் தடுக்க வேண்டும். ஆலய நிருவாக சபையினரே செய்யட்டும் என்று வாளாவிராமல், ஊர்மக்கள் அனைவரும் இணைந்து இதற்கு ஆவன செய்வதற்கு முயலவேண்டும்!

 அடுத்து, முக்கியமாக அடியவர்கள் அவதானிக்கவேண்டியது!

 கதவு திறந்திலிருந்து மாவிடிப்பதோ, மஞ்சள் அரைப்பதோ கூடாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதெல்லாம் இன்று இயந்திரங்களை வைத்தே செய்யப்படும் நிலையில், எத்தனை பேர் இவற்றைச் சரிவரக் கடைப்பிடிக்கின்றனரென்று அறியோம். ஆனால் இதெல்லாம் ஏன் தடுக்கப்பட்டுள்ளது?

 மாவிடித்தால் உடல் சோரும், மஞ்சள் பூசும் போது, மேனியழகு தலைக்கனத்தை ஏற்படுத்தும். ஆடம்பரம், ஆணவம், உடற்சோர்வு இவை இறை வழிபாட்டில் மன ஒருநிலைப்பாட்டைப் பேண ஒத்துழைக்காது. எனவே, கடினமான வேலைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்து, அனைவரும், தெய்வசிந்தனையில் திளைத்திருக்கவேண்டும்; அன்னையவள் ஆராதனையில் மனம் ஒருமுகப்படவேண்டும் என்பதற்காகவே இது முன்னோரால், கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

 ஆனால், இன்று நடப்பதென்ன??

இந்தத் தத்துவங்களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்து, "சர்வாலங்கார பூஷிதை"களாக இன்று ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் "நாரீமணி"களையும், பூசை வேளையில், ஆலயத்தில், சமகால அரசியல் பற்றி விவாதிப்பதற்காக வீட்டில் குறிப்பெடுத்துச் செல்லும் "உத்தமபுருஷர்"களையும் என்னென்று சொல்லி வாழ்த்துவது?? போகட்டும்!

 இப்போது ஆலயத்தின் திருக்குளிர்த்திப் பெருவிழாவின் சிறப்புக்களைப் பார்ப்போமா? 

 எல்லாக் கண்ணகி ஆலயங்களையும் போலவே, இங்கும் திருக்குளிர்த்திச்சடங்கே முக்கியத்துவம் பெறுகிறது. வருடாவருடம் வைகாசி மாதம் இடம்பெறும் இவ்வுற்சவம் ஊர்மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிடும் பெருவிழாவாக அமைந்துவிடுவதால், இதை பலப்பல பெயர்களால் அழைத்து மகிழ்கிறார்கள் அடியவர்கள்.

 வருடத்தின் இந்நாட்களிலேயே அன்னையைத் தரிசிக்க திருக்கதவம் திறந்திருக்கும் என்பதால் “கதவு திறத்தல்” என்றும், அம்மன் கோபம்தணிய குளிர்த்தி பாடி குளிர்விக்கப்படுவதால் “குளுத்தி” என்றும், இக்காலத்தில், அம்மனுக்கு நிகழும் பொங்கல் விழா, தைப்பொங்கல் போல ஒரு பண்டிகையாகவே அமைந்துவிடுவதால், “வைகாசிப்பொங்கல்” என்றும், சகலவித உபசாரங்களும் பெற்று அன்னை கௌரவிக்கப்படுவதால் “சடங்கு” என்றும், பலபெயர்களால் இவ்வுற்சவம் போற்றப்படுகிறது 

கிழக்கிலங்கையின் எல்லாக் கண்ணகி அம்மன் ஆலயங்களிலும் இவ்வைகாசிச் சடங்கு ஒரேபோல் இடம்பெற்றாலும் சில அடிப்படைவிடயங்களில் மாறுபட்டு தத்தம் தனித்துவங்களைப் பேணுகின்றன.

 “வைகாசித்திங்கள் வருவோமென்று மாதுமையாளும் வரங்கொடுத்தாள்” என்ற வரியை மேற்கோள் காட்டி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “திங்கள்” எனும் பதத்தை, பூரணை என்றும் திங்கட்கிழமை என்றும் இருவேறுவிதமாகப் பொருள்கொண்டு மட்டக்களப்புத் தேச கண்ணகி ஆலயங்கள் இருவேறு தினங்களில், குளிர்த்திச்சடங்கை மேற்கொள்கின்றன.

 உண்மையில் கூர்ந்துநோக்கினால், இங்கு “திங்கள்” எனும் பதம், மாதம் எனும் பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளதை உணர்ந்துகொள்ளலாம். எனவே, திங்கட்கிழமையோ, பூரணையோ இரண்டும் வைகாசிமாதத்திலேயே அடங்கிவிடுவதால், அவை காலங்காலமாக தாம் கடைப்பிடிக்கும் மரபை மீறாமலே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தவறில்லை எனலாம்.

 இவற்றில், தம்பிலுவில் ஆலயம், “வைகாசித் திங்களை” திங்கட்கிழமை என்ற பொருளிலேயே கொண்டு, திருக்குளிர்த்தி கொண்டாடும் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 திருக்குளிர்த்திச் சடங்குக்காக ஊரை சுத்தப்படுத்துவார்கள். வீதி, வீடு, வளவு என்பன சுத்தமாகப் பேணப்படுவதுடன், வாசல்களில், மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டு, பத்திரக்கொத்து என்று போற்றப்படும் வேப்பங்குழைகள், படலைகளில்(gate) கட்டப்படும். மது, மச்சம், மாமிசம் போன்றன முற்றாக விலக்கப்படுவதுடன், சனன – மரண தீட்டுடையவர்களும், மாத இயற்கைக்குள்ளான பெண்களும் எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பணிக்கப்படுவார்கள். அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள், சண்டைகள் இயன்றளவு தவிர்க்கப்பட அறிவுறுத்தப்படும்.

 திருக்குளிர்த்தி உற்சவம் இங்கு 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் செவ்வாய் காலை, திருக்கதவம் திறப்பதுடன், (இந்த ஆண்டு 2012.05.29) அடுத்துவரும் ஐந்துநாட்கள், மதியமும் இரவும் இருநேரப் பூசையும் இரவில் திருவீதியுலாவும் நிகழும். இந்நாட்களில், பூசைவேளை தவிர்ந்த வேளைகளில், புகழ்பெற்ற “கண்ணகி வழக்குரை காவியம்” பாடப்படும். கிராமத்துமுதியவர் இருவர் சேர்ந்து இனிய சந்தப்பாடலில் அமைந்த அக்காவியத்தைப் பாடுவது வழக்கம்.

 ஒவ்வொருநாளும், அடியார்கள், ஆலயத்துக்கு “மடைப்பெட்டி” கொண்டு போவார்கள். நெல், கமுகம்பாளை, தாம்பூலம், பூசைப்பொருட்கள், பூக்கள் போன்றவற்றை வைத்து அம்மனுக்கு உபசாரமாகக் கொடுக்கப்படும் ஒரு பனையோலைப்பெட்டி அல்லது தாம்பாளமே “மடைப்பெட்டி” எனப்படும். 

ஆலயவளாகத்திலேயே, இதற்கான பொருட்களும் “அடையாளமும்” விற்கப்படுவதுண்டு. தமது உடல் உபாதைகள், குழந்தைவரம், பிள்ளைகளின் நோய்தீர்க்க என பலப்பல நேர்த்திக்கடன் வைத்தவர்கள், வெள்ளீயத்தகட்டில் எழுதிய கண், கால், கை, குழந்தை முதலான “அடையாளங்களை” அம்மனுக்கு வழங்குவார்கள். தென்னங்கன்று, கோழி, ஆடு, சேலை போன்றவற்றை நேர்த்திக்கடனாக வழங்குவோரும் உண்டு.

 சிலமாதர்கள், வீடுவீடாகச் சென்று, முந்தானையில் நெல்லைப் பிச்சையாக ஏற்று, “மடிப்பிச்சை” நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். தவிர பாற்காவடி, முட்காவடி, அலகுகுத்தல், அங்கப்பிரதட்சணம், தீச்சட்டி எடுத்தல் என விதம்விதமான நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படும் பயபக்தியான சூழலில், ஆலயம் எப்போதும் பக்திமணம் கமழக் காட்சிதரும்.

 விழாவின் 2ஆம் நாளான புதன்கிழமை, “மண்ணெடுத்தல்” என்ற சடங்கு நிகழும். அதன்போது பெறப்பட்ட களிமண்ணைக் கொண்டே 7ஆம் நாளிரவுப் பொங்கலுக்கான பானைகளும் குடுக்கைகளும் வனையப்பெறும். முன்னாட்களில், இக்களிமண்தான் “பச்சைப்பானை” (பொங்கல் வைக்கப் பயன்பட்ட சுடாத பானை) செய்யப் பயன்பட்டது.

 6ஆம் நாள் ஞாயிறு, “கல்யாணக்கால் நாட்டல்” எனும் வைபவம் நிகழும். தெரிந்தெடுத்த வேப்பங்கிளை ஒன்று மண்டபத்தில் நடப்பட்டு, சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கோவலன் – கண்ணகி திருமணத்தைக் கூறும் “கல்யாணப்படிப்பு” பாடப்படும்.

 அன்றிரவு, அலங்கரிக்கப்பட்ட ஏடகத்தில்(தேர்) அம்மன் ஊர்வலம் எழுந்தருள்வாள். தம்மைத் தேடிவந்து அருள்பாலிக்கும் அன்னையை, மக்கள் நிறைகுடம் வைத்து வரவேற்பர். வீதிகளின் பிரபல நாற்சந்திகளில் சிலர்சேர்ந்து அலங்காரப்பந்தல்கள் அமைத்திருப்பர். அவ்விடங்களில், கும்மி, கோலாட்டம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு. 

அம்மன் வலம்வரும் வழியெங்கும் ஊர்சுற்றுக்காவியம், தம்பிலுவில் அம்மன் காவியம், அம்மன் கும்மி, வசந்தன் பாடல்கள் போன்ற கிராமியப்பாடல்களை இசைத்தவாறு முதியவர்கள் அம்மனைப் பின்தொடர்வார்கள்.

 ஊர்வலப் பாதைகளில் ஆங்காங்கே “பள்ளுக்கு வளைதல்” எனும் கலையாடலும் இடம்பெறும். காய்ந்த தென்னோலைகளை இட்டு எரித்து, “அம்மன் பள்ளு” என்ற பாடலைப் பாடி ஆடியவாறு, வாலிபர்கள் அத்தீயை வலம்வருவர். இது அம்மனுக்குக் கண்ணூறு கழிப்பதற்காகச் செய்யப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது.

 7ஆம் நாள் திங்கட்கிழமை வைகாசிப்பொங்கல் தினம். அன்று, காலையிலேயே பெண்கள் ஆலயத்திற்கூடி நெல்குற்றுவார்கள். அன்றிரவு அம்மனின் பிரத்தியேகப் பொங்கல் உள்வீதியில் இடம்பெறும். தவிர, ஊர்மக்களும் நேர்த்திக்கடன் வைத்தவர்களும் ஆலய வெளிவீதியில் பொங்குவார்கள். வீதியெங்கும் கனல் கக்கும் அடுப்புக்களாலும்,அப்போது எழும் புகைமண்டத்தாலும், ஆலயமே எரியுண்ட மதுரையென காட்சியளித்துக்கொண்டிருக்கும். அக்காட்சிக்கு உயிர்கொடுப்பது போல், ஆலயத்தில், கொலைக்களக் காதை பாடி முடிக்கப்படும்.

 பூசைக்குமுன், அடியவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு அகப்பை பொங்கல், அம்மன் முன் படைக்கப்பட்டு, ஒரு பொங்கல் மலையே காட்சிதரும். அன்றைய இரவுப்பூசை, நள்ளிரவு 12 மணிக்குப் பின்பே தொடங்கும். ஆலய தரிசனமண்டபத்தின் மத்தியில் குளிர்த்தியாடலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாரான பின்னர் பூசை இடம்பெறும்.

 பூசை முடிந்தபின், அம்மனை சேலையால் சுற்றிக்கொணர்ந்து குளிர்த்தியாடும் பாத்திரத்துள் வைப்பார்கள். தொடர்ந்து இரு பெரியவர்கள் அம்மன் குளிர்த்திப்பாடல் பாட, அரிவையர் குரவையிட, அம்மன், பத்திரக்கொத்தால் மஞ்சள்நீரிற் புனலாடுவாள்.

 “காழியிடை சூழக் காவேரிப்பூம் பட்டணத்தில் வாழ்வணிகர் மரபின்போன மாதே குளிர்ந்தருள்வாய்!”

(“உறுதியும் துன்பமும் உன்னைச் சூழுமாறு, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்குலத்தில் தோன்றிய பெண்ணே, கோபம்நீங்கி மனங்குளிர்வாயாக!” என்பது இதன் பொருள்.)

 குளிர்த்தியாடலைத் தொடர்ந்து, “பணிமாறல்” எனுஞ் சடங்கு இடம்பெறும். அதாவது, ஆலயப்பூசகரான கப்புகனார் அவ்வருடத்தில் அம்மனுக்கு நேர்த்தியாக வந்த சேலைகளில் தெரிந்தெடுத்த மூன்றை உடுத்துக் கொண்டு வருவார். இது, அதுவரையான சகல பூசனைகளையும் எந்தவிதமான குறைகளுமின்றி அம்மன் ஏற்றுக்கொண்டாள் என்பதன் அடையாளமாக நடத்தப்படுகிறது.

 நூற்றுக்கணக்கான அடியார்கள் கூடியிருக்கும்போதும், பணிமாறலின் போது ஆலயச் சூழலில் நிலவும் நிசப்தமும், மென்மையாக ஒலிக்கும் குரவைச்சத்தமும் கப்புகனாரின் கையில் குலுங்கும் சிலம்பின் கலகலப்பும் விவரிக்கமுடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

 இதன்பின்னர், அம்மன் புனலாடிய மஞ்சள்நீர், அடியவர் யாவர் மீதும் தெளிக்கப்படும். அம்மனுக்குப் படைக்கப்பட்ட பொங்கலும், பாணக்கமும் (பஞ்சாமிர்தம்) அடியார்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, “வட்டா கூறுதல்” எனும் சடங்கு இடம்பெற்று, பண்டைய மரபுவழிப்படி, மீண்டும் ஆலயக்கதவு சாத்தப்படும்.

 ஆலயக் கதவு சாத்தியவுடன், கப்புகனாரையும், வண்ணக்கரையும் மேளதாளத்துடன் அவரவர் வீடுகளுக்குக் கொண்டுசென்று விட்டுவரும் வழக்கம், காலவெள்ளத்தில் சிக்கி இன்று மறைந்துவிட்டது. கதவடைத்து 8ஆம் நாள், “எட்டாம் சடங்கு” எனப்படும் வைரவர் பூசை நடந்தேறும். இத்துடன் அவ்வருடக் குளிர்த்தி வைபவம் இனிதே நிறைவுறும். 

நெடுநாளாகக் குளிர்த்திவைபவம் மட்டுமே இவ்வாலயத்தில் விசேடம் என இருந்தது. அரிதாக வெள்ளிக்கிழமைகளில் இடம்பெற்ற நேர்த்திக்கடன் பூசைகளைத் தவிர, ஏனைய நாட்களில் சனநடமாட்டமற்ற, மீமாந்த (அமானுஷ்ய) சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாகவே ஆலய வளாகம் இருந்துவந்தது.

 சனப்பெருக்கமும், வைதீகநெறியின் தாக்கமும், வந்தனை வழிபாடுகளில் சிறிதுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. தற்போது, செவ்வாய், வெள்ளி தோறும் மூடிய திருக்கதவின் முன்னே வாராந்தப்பூசை இடம்பெறுகின்றது. தவிர, தைப்பொங்கல் – நவராத்திரி ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.

 பெரும்பாலான கண்ணகியம்மன் ஆலயங்கள் போல இவ்வாலயத்தின் பூசகரும் முன்பு “கட்டாடியார்” என்றே அழைக்கப்பட்டிருக்கிறார். கி.பி 17ஆம் நூற்றாண்டில் தம்பிலுவில் மழைக்காவியம் பாடிய கண்ணப்பர், தன்னை, “கட்டாடி கண்ணப்பன்” என்றே குறிப்பிடுவதால் இதை உறுதிப்படுத்தமுடிகிறது. பிற்காலத்து, கண்டி இராச்சிய ஆதிக்கம் - கதிர்காம யாத்திரையின் தாக்கம் என்பவற்றாற்போலும், இவ்வாலயப் பூசகர், சிங்களக் "கப்புறாளை"யின் திரிபாக, இன்று கப்புகனார் என்று அழைக்கப்படுகிறார். 

வாய் கட்டி மௌனபூசையாகவும்,– தம்பிலுவில் கண்ணகை அம்மன் காவியம் முதலான பதிகங்கள் அடங்கிய தமிழ் மந்திரங்களால் அருச்சித்தவாறும், இங்கு பூசை நிகழ்த்தப்படுகிறது.

 ஆலய நிர்வாகம்:- 
 தம்பிலுவிற் கிராமத்தின் குடிவழிப்பாரம்பரியம் வழியேதான், இவ்வாலயமும் நிருவகிக்கப்படுகிறது. ஆலய நிருவாகசபைத் தலைவர், மட்டக்களப்புத் தமிழகவழக்கப்படி “வண்ணக்கர்” எனப்படுகிறார். இவர் பொதுவாக, கட்டப்பத்தான்குடியிலிருந்து தெரிவுசெய்யப்படுவார். மேலும், ஆலய நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தென்சேரியின் 7 குடிகளிலிருந்தும் 11 பாகைக்காரர்கள் இடம்பெறுவர்.

 கட்டப்பத்தான்குடி, சிங்களக்குடி, முன்னங்கைச்சவடிக்குடி, வேடக்குடி, கோரைக்களப்புக்குடி, குருக்கள்குடி, விஸ்வப்பிரம்மகுலத்தினர் ஆகிய 7 குடிகளிலிருந்தும் தலா ஒவ்வொருவரும், கட்டப்பத்தான்குடி, கோரைக்களப்புக்குடி எனும் குடிகளிலிருந்து மேலதிகமாக முறையே மூவரும் ஒருவரும் என தெரிவு செய்யப்பட்ட 11 பாகைக்காரர்களைக் கொண்டு ஆலய நிருவாக சபை அமைக்கப்பட்டுள்ளது.

 எழுபதுகளில் எடுக்கப்பட்ட ஒரு பொதுக்கூட்டமுடிவின்படி தலைவர் – செயலாளர் – பொருளாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்; ஆலயம் வழக்கமான நிருவாகத்திற்குட்பட்டுள்ளது.

 அடியார்களின் நன்கொடையிலும் பரிபாலன சபையினர் முயற்சியிலும் ஆலயம் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது. மேலதிக நன்கொடைகளை, வெறுமனே மடங்கள் – பரிவார சன்னதிகளைக் கட்டி வீணாக்காது, ஆலயத்தின் பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து, சமூக சேவைகளுக்கும் பொதுப்பணிகளுக்கும் பங்களிப்பது, ஆலயத்தின் பெயரில் மனிதநேயத்தையும் கூட்டுறவு மனப்பான்மையையும் அதிகரிக்க உதவும் என்பது அடியார் சிலரது கருத்து.

 தென்சேரியில் அடங்காத கண்டங்குடி, சருவிலிகுடி, வைத்தினார்குடி, பணிக்கன்குடி (முக்குவர்குடி) போன்றோர் “வடசேரி” எனப்படுகின்றனர். இம்மக்கள் யாவரும் இணைந்து மூன்று தசாப்தங்களுக்கு முன்வரை, பிரசித்திபெற்ற கொம்புவிளையாட்டை இவ்வூரில் நடாத்திவந்ததாக அறியமுடிகிறது.

 அக்காலத்தில் நாட்டிலேற்பட்ட அசாதாரண நிலையாலும், அதன்போது இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் கவனத்திற்கொண்டும், கொம்புவிளையாட்டை நிறுத்திவிட பெரியோர்கள் தீர்மானித்ததாக அறியமுடிகின்றது.

 கொம்பு விளையாட்டு தவிர, கூத்துக்கலை, வசந்தனாடல் போன்றன இவ்வூரில் வளர்வதற்கும் கண்ணகி வழிபாடே ஆதாரமாக இருந்திருக்கிறது. 

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். "ஹெய்ட்" என்பவர், 1970களில் இவ்வூருக்கு வந்து தங்கியிருந்து, கண்ணகி வழிபாடு பற்றி ஆராய்ந்து "Pattini Cult" எனும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது, இவ்வூருக்குச் சிறப்புத் தரும் இன்னொரு பெருமையாகும்.


 அன்னையின் அற்புதங்களும், அதிசயங்களும் எண்ணிலடங்காதவை. அவள் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லி நெக்குருகுவோர் பலர் இன்றும் இங்குண்டு.

 இவ்வூர்மக்களின் வாழ்க்கையில், பிரிக்கமுடியாத ஓரங்கமாகவே, கண்ணகி வழிபாடு விளங்குகிறது. வருடாவருடம், வீடுதோறும், ஆடிமாதத்திற் செய்யப்படும் “சர்க்கரையமுது கொடுத்தல்” எனும் சடங்கும், இங்கு கண்ணகையம்மனுக்காகவே செய்யப்படுகிறது. கலையாடல், உழைப்பு, விவசாயம், வாழ்வியற்கோலங்கள் யாவற்றிலும் இவ்வூர்மக்கள் கண்ணகையம்மனையே நம்பியிருக்கின்றமை, அத்தெய்வம் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது.

 தமிழ் நாட்டில் அவதரித்து, தண்டமிழ்த் தம்பிலுவில்லில் வீற்றிருக்கும், தமிழினத்தின் நிகரற்ற தலைமகளாம் கண்ணகைத் தாயின் தாமரைப்பாதங்களைச் சரணடவோம்! இன்னல் பல கண்டு நிற்கும் தமிழினம், துன்பமெல்லாம் நீங்கி, தரணியிலே வீறுகொண்டெழுந்திட வேண்டுமென நகுவிழியாளை நயந்து போற்றுவோம்!! இயற்கை அமைதியுறவும், வேற்றுமை நீங்கி மனுக்குல ஒற்றுமை ஓங்கவும், விழிநகை வல்லியாளின் விரைகழல்கள் பிரார்த்திப்போம்!!! ஓம் சக்தி!!!! _/\_ “

கெற்பமா யுலகமதில் அவதரித்தாயே கேளுடைய பாலகற் கிருபை வைப்பாயே நெற்றாகியே பயிர்கள் வாடுதலைக் கண்டும் நின்றழுத பேர் மகிழ விண்டுமழை தாராய் அற்பனென்றென்னை இகழ்ந்தாலும் இப்பாடல் தனிலுள்ள சீர்தளைக் காயினுமிரங்கி சற்பமா மணிநூபுரத்தி முருகேசர் வளர் தம்பிலுவிலூரில் உறை உலகமாதாவே!” -
தம்பிலுவில் மழைக்காவியம். 09

 (கெற்பம் - கற்பம் – கற்பக மரம், கேள் – உறவு, நெற்று – முதிர்ந்து உலர்ந்த கதிர்கள், விண்டு – மேகம், சீர்தளை – ஒரு செய்யுள்அங்கம், சற்பமாமணிநூபுரத்தி – நாகமணிகளைக் கொண்ட சிலம்பை அணிந்தவள்.)