Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

கல்வியிற் கரையிலா தம்பிலூர்! -ஓர் மறக்கப்பட்ட வரலாறு

By -Thulanjanan கல்வி……தமிழரின் பரம்பரைச்சொத்து அது! எத்தனையோ படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், பிரச்சனைகள், அவலங்களைச் சந்தித்தபோதும் தமி...

By -Thulanjanan
கல்வி……தமிழரின் பரம்பரைச்சொத்து அது! எத்தனையோ படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், பிரச்சனைகள், அவலங்களைச் சந்தித்தபோதும் தமிழரை விட்டு அது முற்றாக நீங்கியதில்லை!

சக்தியை வழிபடும் நவராத்திரியையே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து “சரஸ்வதி பூசை”யாகக் கொண்டாடுபவர்கள் நாம்! ஈழத்தமிழரைப் பொறுத்தவரை கல்விக்கு உயர்ந்த இடம் உண்டு!

அந்தவழியில் வந்த நம்மூரின் கல்வி வரலாறு எவ்வளவு நீண்டது, எவ்வளவு ஆழமானது என்பதை இயன்றளவு புரியவைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்!

ஈழவளநாட்டின் நீண்டகாலக் கல்விப்பாரம்பரியம் உள்ள ஊர்களில் தம்பிலுவிலும் ஒன்று! குறிப்பாக தென்கிழக்கிலங்கையில், மேலைநாட்டவரின் வருகையைத்தொடர்ந்து கல்விவிழிப்புணர்வு ஏற்பட்ட ஊர்களில், தம்பிலுவில் பிரதான இடம் வகித்தது என்பது பலரும் அறியாத விடயம்!

யாழ்மண்ணில் போர்த்துக்கேயரின் வருகையைத் தொடர்ந்து, உரோமன் கத்தோலிக்கக்குருமாரால் கல்விப்புரட்சி ஏற்பட்டதுபோல் இப்பகுதியில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தியவர்கள் மெதடிஸ்தக்குருமார்கள் என்றால் மிகையாகா.

மதம் பரப்பும் நோக்கத்துடன் இங்கு வந்த மெதடிஸ்தக்குருமாரினால் ஏற்பட்ட கல்விவிழிப்புணர்வையோ அதனைத்தொடர்ந்து எமது பிரதேசத்தில் ஏற்பட்ட பண்பாட்டுவிழிப்புணர்வையோ குறைத்து மதிப்பிட முடியாது.

மிஷனரிகளின் வருகைக்கு முன்பு இங்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் கூறிவிடமுடியாது. ஆரம்பகாலத்தில் திண்ணப்பள்ளிக்கூடங்களும் “சட்டம்பியார்” மூலம் கற்பித்தலும் நடைமுறையிலிருந்து வந்ததாக அறியமுடிகிறது. ஏட்டுச்சுவடிகளில் நெட்டுருப்பண்ணி பாடம் படிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இன்றும் அரிதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் பழங்கால ஏடுகள் சாட்சியம் கூறுகின்றன.

மரணவீடுகளில், திருப்பொற்சுண்ணம், வைகுந்த அம்மானை, கஞ்சன் அம்மானை படித்தல், ஆலயங்களில் திருமுறை ஓதல், மேலும் இவ்வூருக்குச் சிறப்பான கண்ணகிவழிபாட்டோடு தொடர்புடைய காவியம், வழக்குரை, வசந்தன் போன்றவற்றைப் பாடும் அளவுக்காவது போதுமான தமிழறிவு எதிர்பார்க்கப்பட்டது.

சட்டம்பியார் மூலமான கற்பித்தலில் இவையே பாடத்திட்டங்களாக இருந்தது எனப் பெரியோர் மூலம் அறியமுடிகிறது. தவிர திருக்கோவில் பூசகர்களாக இருந்த வீரசைவர்கள் வசித்த தம்பட்டையிலும் தம்பிலுவிலிலும் குருகுலம் எனச்சொல்லத்தக்கவகையில் சிறிய அளவில் சிறார்களுக்கு வேதப்பயிற்சியும் சமய அறிவும் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இத்தகைய கல்வி வளர்ச்சி தான், 17ஆம் நூற்றாண்டிலேயே மழைக்காவியம் பாடி மழை பெய்யவைத்த கண்ணப்பர், வசந்தன் கும்மியின் குறிப்பிடத்தக்க அளவான பாடல்களையும் பெருமளவு நாட்டுக்கூத்துகளையும் இயற்றிய கணபதி ஐயர், பிற்காலத்தைய குஞ்சித்தம்பிப்பண்டிதர், வில்லியம்பிள்ளை என்று ஒரு பெரும்புலவர்பரம்பரையை தம்பிலுவில்மண் உருவாக்கக் காரணமானது என்றால் அது மிகையில்லை.

ஆனால் மேற்கூறிய கல்விவளங்கள், குறிப்பிட்ட வகுப்பினர்க்கு அல்லது ஏற்றவர் என இனங்காணப்பட்டோர்க்கு மட்டுமே வழங்கப்பட்டதால் சகலருக்கும் கல்வி என்ற வழக்கம் காணப்படவில்லை. அந்தவழக்கம் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஏற்கப்படும் காலமும் மெதடிஸ்தக்குருமாரின் இலங்கை வருகையோடு இங்கு ஆரம்பமாயிற்று.

நம்மூரிலேயே, இன்னும் சில ஆண்டுகளில் 150ஆமாண்டு விழாவைக் கொண்டாடக்கூடிய பாடசாலைகள் இரண்டு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது என்பதில் வெட்கப்பட்டே ஆகவேண்டும். ஆம்! அவை இன்றைய தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் என்பன!

சைவப்பெருமக்கள் விரவிவாழ்ந்த தம்பிலுவிற்பதியில், கிறிஸ்தவமதத்தை முன்னிலைப்படுத்தி 1877ஆமாண்டு மெதடிஸ்தமிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைதான் இன்றைய சரஸ்வதி வித்தியாலயம். அதன் அப்போதைய பெயர் “தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் ஆண்கள் பாடசாலை.”

S.S.C என்றழைக்கப்பட்ட சிரேஷ்ட வகுப்பு வரை இருந்த அப்பாடசாலையின் ஆரம்பகாலத்தில் வயிரமுத்து,சாமித்தம்பி போன்ற பெரியோர்கள் உபாத்தியாயர்களாகப் பணிபுரிந்ததாகவும் ஆங்கிலம், தமிழ், கணக்கு, கிறிஸ்தவம் போன்றன கற்பிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

பல இடங்களிலும் ஆச்சாரம், அபச்சாரம் என்ற பத்தாம்பசலிக்கொள்கைகளின் கீழ் பெண்சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்த காலத்தில், இவ்வூரில் ஒரு பெண்கள் பாடசாலை உருவானது – அதில் கல்வி கற்பதற்காக மகளிர் மதம்மாறவும் தயங்கவில்லை என்ற செய்திகள் வியப்பையே அளிக்கின்றன!

அதிசயம்தான்! பெண்கள் கற்கவேண்டும், முழு உரிமையையும் பெறவேண்டும் என்று பாரதத்தில் பாரதி முழங்கிக்கொண்டிருந்தபோது இவ்வூர்மாதர் அமைதியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தனர்! அதற்கும் வழிசமைத்தது மிஷனரிகள்தான் என்றால் அது தவறாகா!

மிஷனரிகளின் உபயத்தில் 1879ஆமாண்டு, தம்பிலுவில்லில் “மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை” ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இன்றைய தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பமாகும். இது தம்பிலுவில் பலநோக்குக்கூட்டுறவுச்சங்கக்கிளை (மினி கோப் சிற்றி) இன்று அமைந்துள்ள இடத்திலேயே காணப்பட்டது.

இப்பெண்கள் பாடசாலை ஆரம்பத்தில் 73 மாணவிகளைக் கொண்டிருந்ததாகவும் மட்டக்களப்புத்தமிழகத்தின் முதன்மையான பெண்கள் பாடசாலையாக இருந்ததாகவும் அறியமுடிகிறது.

இப்பாடசாலைகளில் எண்கணிதம், கேத்திரகணிதம், அட்சரகணிதம், ஆங்கிலம், கிறிஸ்தவம், நாட்டுச்சீவன சாத்திரம்,பூமி சாத்திரம், இலக்கியம், சித்திரம் முதலான பாடங்கள் கற்பிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

1930,40களில் ஆண்கள் பாடசாலையில் பின்வரும் ஆசிரியர்கள் கற்பித்ததாக அறியமுடிகின்றது. அப்பாடசாலையினது வரலாற்றிலும் நம்மூர்க் கல்விவரலாற்றிலும் இவர்கள் யாவருமே பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவர்கள் என்ற முக்கியத்துவம் கருதி, இயன்றவரை அவர்கள் அனைவரையும் இங்கு குறிக்கவிழைகிறோம்:

திரு.கனகசபை(கல்லாறு),
திரு.வேலுப்பிள்ளை(துறைநீலாவணை),
திரு.சிந்தாத்துரை(முதலைக்குடா)
திரு.சண்முகம்பிள்ளை(யாழ்ப்பாணம்)
திரு.இளையதம்பி(கல்முனை)
திரு.இராசையா(காரைதீவு)
திரு.குழந்தைவேல்(கல்லாறு)
திரு.திருநாவுக்கரசு(மட்டக்களப்பு)
திரு.கணபதிப்பிள்ளை(கல்முனை)
திரு.க.அ.பாக்கியன்(களுவாஞ்சிக்குடி)
ஆகிய வெளியூர்ப் பெரியோர்களும்

திரு.பூபாலபிள்ளை
திரு.சரவணமுத்து
திரு.தம்பிராசா
திரு.சௌந்தரராசா
திரு.கனகரெத்தினம் உபதேசியார்
திரு.சோமசுந்தரம்
திரு.வேல்முருகு விதானையார்(திருக்கோவில்)
திரு.நவரெட்ணம்பிள்ளை
திரு.வடிவேல்
திருமதி. வின்னி வடிவேல்
திரு.இராசதுரை
திரு.அழகையா
திரு.ஜெயரெட்ணம்(திருக்கோவில்)
திரு.செல்லையா(திருக்கோவில்)
ஆகிய உள்ளூர்ப்பிரமுகர்களையும் ஆசிரியர்களாகக்கொண்டு ஆண்கள் பாடசாலை வளரலாயிற்று.

பெண்கள் பாடசாலையில் 1-5 வரையான வகுப்புக்கள் காணப்பட்ட அதேவேளை, திருமதி மாரிமுத்து சௌந்தரராசா அப்பள்ளித் தலைமையாசிரியையாகவும் திருமதி. கணபதிப்பிள்ளை(கல்முனை), திருமதி. சின்னத்தங்கம்(திருக்கோவில்) ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றினர்.

மதிய உணவாக சோறு வழங்கப்பட்டது. இருபாடசாலை மாணவர்களும் ஞாயிறுதோறும் திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயம் சென்றனர். வருடத்திலொருநாள், எல்லோரும் வீடுவீடாகச்சென்று எண்ணெய்ச்சிந்துபாடி சேகரித்த நெற்கோட்டைகள், நாளாந்த மதிய உணவுக்குப் பயன்பட்டன. (நெற்கோட்டை – நெல்லை வைக்கோலுள் வைத்து வரிந்து கட்டிப்பெறப்படும் கட்டு; ஒரு நெற்கோட்டையிலிருந்து சுமார் 2 மரைக்கால் நெல் பெறலாமாம்.)

கல்விப்பணியூடாக மெதடிஸ்தம் இப்பிரதேசத்தில் ஆழமாகக்காலூன்றிய வேளை, சைவப்பாரம்பரியத்தில் திளைத்த பலர் கொதித்துப்போயினர். சைவமேன்மை முன்னிறுத்தப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்ட அவர்களில் ஒருவரான தம்பிலுவிற்தனவந்தர் ஆ.நடராசா என்பார், 1944ஆமாண்டளவில் தன் சொந்தச்செலவிலேயே ஓர் சைவப்பாடசாலையை அமைத்தார். உண்மையில் கூறப்போனால் இதுவே இன்றைய தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பம்!

இன்றைய தம்பிலுவில் சித்திவிநாயகர் ஆலயத்துக்கு முன்பாக, தென்கிழக்குப்புறம், சிலவருடங்களுக்கு முன்வரை ஆரியப்பட்டர் நூலகம் இயங்கிவந்த வளவிலேயே, அன்று சைவப்பாடசாலை உதயமானது.

மெதடிஸ்தபாடசாலைக்குப் போட்டியாக இதிலும் சிரேஷ்டவகுப்பு (S.S.C) வரையான வகுப்புக்கள் காணப்பட்டன. மதிய இடைவேளையில் விசுக்கோத்தும் தேநீரும் வழங்கப்பட்டன. கல்லடியைச் சேர்ந்த திரு.குமாரசாமி என்னும் ஆசிரியர், கல்வி நடவடிக்கைகளில் நடராசா அவர்களுடன் தோள்கொடுத்துநின்றார்.

மாணாக்கர்க்கு சைவமும் தமிழும் ஊன்றிக்கற்பிக்கப்பட்டதன் விளைவாலும் நாட்டுக்கூத்துக்கள், கண்ணகி வழிபாடு போன்ற கலையாடல்களிலேற்பட்ட மறுமலர்ச்சியும் மக்களுக்கு சைவவிழிப்புணர்வை ஏற்படுத்தலாயின.

கல்விக்காக மதம்மாறிய பலர் மீண்டும் சைவத்தைத் தழுவிக்கொண்டனர். சைவப்பாடசாலையில் மேலும் பல ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டார்கள். மாணவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க, மெதடிஸ்த ஆண் – பெண் பாடசாலைகளில் மாணவர் வருகையில் வீழ்ச்சி ஏற்படலாயிற்று. இதனால் அப்பாடசாலைகளை, மிஷனரிகள் நிரந்தரமாகக் கைவிடும்படி நேர்ந்தது.

1945இல் இம்மூன்று பாடசாலைகளும் அன்றைய ஆங்கில அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலை என்பன தமக்குள் இடமாற்றப்பட்டதுடன் இதற்கேற்ப இவை பெயர்மாற்றமும் பெற்றன.

1. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டதுடன் “மட்/ தம்பிலுவில் அரசினர் பெண்கள் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பட்டது.

2. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டதுடன் “மட்/ தம்பிலுவில் அரசினர் ஆண்கள் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பட்டது. இது ஆரம்பத்தில் காணப்பட்ட இடத்திலிருந்து(இன்றைய மினி கோப் சிற்றி வளாகம்) சைவப்பாடசாலை காணப்பட்ட இடத்திற்கு ( முன்னைய ஆரியப்பட்டர் நூலகம்) இடம்மாற்றப்பட்டது.

3. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை இருந்த இடத்தில், “மட்/தம்பிலுவில் கனிஷ்ட வித்தியாலயம்” அமைக்கப்பட்டது.

ஆண் – பெண் பாடசாலைகளில் 1 முதல் 5 வரை வகுப்புக்கள் காணப்பட்டன. 5ஆம் வகுப்பு சித்தியடைந்தபின் கனிஷ்டவித்தியாலயம் சென்று 6 முதல் 8 வரையான வகுப்புக்களைக் கற்பது வழமையாக இருந்தது.

அரசினர் பாடசாலையாக மாறிய பெண்கள் பாடசாலையின் முதல் அதிபராக, இவ்வூரைச் சேர்ந்த திரு.வ. சிவநிருபசிங்கம் என்பவர் அமர்ந்தார். 1947இல் இவர் மாற்றலாகிச் செல்ல, திரு.ந. தங்கராசா(காரைதீவு) அதிபரானார்.


ஆண்கள் பாடசாலைக்கு, தம்பிலுவில்லைச்சேர்ந்த திரு.வீ. பரநிருபசிங்கம் முதல் அதிபரானார். மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வரவேண்டும் என்பதில் இவர் காட்டிய அக்கறை, இடையில் படிப்பைவிட்ட சிறுவர்களை வீடுகளுக்கே சென்று அழைத்துவந்து கற்பித்தமை, அவர்களுக்கு இலவசமாக, மேலதிகக் கற்பித்தலை மேற்கொண்டு இப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்களை(Tution) அறிமுகஞ்செய்தமை போன்ற கல்விசார் செயற்பாடுகளை ஆரம்பித்த இவர், யாவராலும் “பெரியையா” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

1952இல் ஆண் – பெண் பாடசாலைகள் மீண்டுமொரு பெயர்மாற்றத்தைச் சந்தித்தன. இவை கலவன் பாடசாலைகளாக்கப்பட்டு, பெண்கள் பாடசாலை, “மட்/ தம்பிலுவில் கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்றும் ஆண்கள் பாடசாலை, “மட்/ தம்பிலுவில் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பெற்றன.

இன்று, இறுதியாக, சரஸ்வதி வித்தியாலயம் – கலைமகள் வித்தியாலயம் – மகா வித்தியாலயம் என்ற பெயர்களைத்தாங்கி நிற்கும் இம்மூன்று பாடசாலைகளும், மக்களின் பேச்சுவழக்கில் முறையே கிழக்குப்பள்ளி, மேற்குப்பள்ளி, ஜூனியர் ஸ்கூல் என்ற பெயர்களாலேயே அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப்பள்ளியில் ந.தங்கராசாவை அடுத்து திரு.வேல்நாயகம்(காரைதீவு), திரு.எஸ். வன்னமணி(அக்கரைப்பற்று) ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றினர். 1969இல், தம்பிலுவில் திரு.அ. கணபதிப்பிள்ளை (உடையார்) அதிபரானார். 1972இல் அவர் ஓய்வுபெற இதே ஊரைச்சேர்ந்த திரு.இராசசுந்தரம் அதிபரானார். இதற்குப்பின்பு, கிழக்குப்பள்ளி, இறுதியாக “சரஸ்வதி வித்தியாலயம்” என்ற பெயரைத்தாங்கிக்கொண்டது.

1877இல் ஆண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 1945இல் பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டு, பின்பு கிழக்குப்பள்ளியாகி, இறுதியில் சரஸ்வதி வித்தியாலயம் என்ற பெயரைத்தாங்கி நிற்கும் இப்பாடசாலை, எதிர்வரும் வருடத்துடன், தன் கல்வி வரலாற்றில் 135 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து நிற்கின்றது என்பது, நம்மூர் மக்கள் யாவரும் பெருமைப்படவேண்டிய விடயம்!

பழைய சைவப்பாடசாலை வளாகத்தில் இயங்கிவந்த மேற்குப்பள்ளி, தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் எனப்பெயர் மாற்றப்பட்டதுடன், இடவசதி கருதி இன்றைய இடத்துக்கும் மாற்றப்பட்டது.

1879இல் பெண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 1945இல், ஆண்கள் பாடசாலையாக, சைவப்பாடசாலை வளாகத்துக்கு மாற்றப்பட்டு, மேற்குப்பள்ளியாக இயங்கிவந்த இப்பாடசாலையும் எதிர்வரும் வருடத்துடன் தன் 133 வருடங்களைப்பூர்த்தி செய்து நிற்கின்றது என்பதும் பெருமைக்குரியதே!

கனிஷ்டவித்தியாலயத்திற்கு நாவற்குடாவைச்சேர்ந்த திரு. செபமாலை முதல் அதிபரானார். 1953 இல் திரு.கே. சோமசுந்தரம் அதிபரானதுடன் 1958இல், அது மகாவித்தியாலயம் எனப்பெயர் மாற்றப்பட்டு, இன்றைய இடத்துக்கு மாற்றப்பட்டது.

சைவப்பாடசாலையாக 1944இல் தோன்றி, மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வளாகத்தில் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் வளர்ந்த செடியின் இன்றைய பிரம்மாண்டமான தோற்றம் தான் தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயம்!

தான் மகாவித்தியாலயமாக மாறியதைக்கருத்திற்கொண்டு கடந்த 2008இல் பொன்விழாக் கொண்டாடிய அப்பாடசாலையின் வரலாறு, இவ்வாதாரங்கள் மூலம் இன்னும் 14வருடங்கள் பின்செல்லுகிறது. எனவே இன்னும் 8 வருடங்களில் பவளவிழா (75ஆமாண்டு நிறைவு) கொண்டாடக்கூடிய எல்லாத்தகுதிகளையும் இப்பாடசாலை கொண்டிருக்கின்றது.

இத்தகைய நீண்டகாலக் கல்வி வரலாற்றை எண்ணிப் பெருமைப்பட நினைக்கும் அதேவேளை, மறுபக்கம் ஒரு கேள்வியும் எழுகிறது…

ஒருபாடசாலையின் வயது 135, இன்னொரு பாடசாலையின் வயது 133, மற்றொன்றின் வயது 68! இத்தகைய நீண்ட கல்வி வரலாற்றைக்கொண்டிருக்கும் ஒரு ஊரின் கல்விசார்சாதனைகள் எந்தமட்டத்தில் இருக்கவேண்டும்?

பரீட்சைகள், தமிழ்த்தின – ஆங்கிலதினப்போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள் போன்றவற்றின் அண்மைக்காலப் பெறுபேறுகள் திருப்திப்படும்படி இல்லையே, ஏன்?

150 வருடக்கல்வி வரலாற்றின் பெறுபேறு, உயர்தரத்தில், இன்றும் ஒரு வைத்தியர், ஒரு பொறியியலாளர், நான்கைந்து கலைப்பட்டதாரிகளைத்தானே பிரசவிக்கிறது? 20,30 வருடங்களாக இந்த எண்ணிக்கையில் மாற்றமேற்படவில்லையே? என்ன காரணம்? சிறிதளவாவது முன்னேற்றம் ஏற்படவேண்டாம்?

இதற்கெல்லாம் காரணமென்று அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது மட்டும் கைநீட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கல்விக்குப் பொறுப்புக்கூறவேண்டியவை பாடசாலைகள் மட்டுமே என்ற எண்ணம் நீங்கவேண்டும். பெற்றோர், சமூகம் யாவரும் ஒன்றிணைந்து செயற்படும் போதே கல்வித்துறை முன்னேற்றமடையும்.

எத்தனையோ புத்திஜீவிகள் இவ்வூரிலிருந்து உருவாகியிருக்கிறார்கள் தான். ஆனால் அந்த எண்ணிக்கை போதாது! இன்னும் பல கல்விமான்களும் அறிஞர்களும் இவ்வூரிலிருந்து உதிக்கவேண்டும்.
இது வெறும் நப்பாசையோ பேராசையோ அல்ல! சாத்தியமாகக்கூடிய ஆவல் தான்! நடக்கக்கூடிய காரியம் தான்!

ஆண்டுகள் பல கடந்தும் இவ்வூரின் கல்விப்பாரம்பரியம் முற்றாக இழக்கப்படவில்லை என்பதற்கான சான்று தான் கடந்தவருடம் 2010 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று தம்பிலுவில் மாணவி செல்வி.சுபதா மாலவன் படைத்த சாதனை!

இத்தகைய சாதனைகள் தொடர்ந்தும் படைக்கப்படவேண்டும். அது இன்றைய இளந்தலைமுறையினர் கையில் மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகன் கையிலும் தங்கியுள்ளது என்று சொல்லித்தான் புரியவேண்டுமென்பதில்லை.

இன்றைய உலகில், கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் அபிவிருத்திச்சுட்டெண்ணாகவே பார்க்கப்படுகிறது. அச்சுட்டெண் மட்டத்தை அதிகரிப்பது, நம்மூருக்கு மட்டுமல்ல; நமது பிரதேசத்திற்கு, ஏன், நாம் சார்ந்த முழு ஈழத்தமிழ்ச்சமுதாயத்திற்குமே நன்மை பயப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மனச்சாட்சியுள்ள எவரும் தன்னை நோக்கியே கேட்டுக்கொள்ளட்டும்….
“என்ன செய்யப்போகிறோம்…?”

மறக்கப்பட்ட இந்த வரலாறு தன்னோடு மறைந்துவிடக்கூடாது, எதிர்காலச்சந்ததியினர் யாவரும் அறிந்திருக்கவேண்டும் என்ற பேராவலுடன், இவ்விடயங்களை அறியத்தந்த பெரியார், ஓய்வுபெற்ற அதிபர் திரு.இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

BY-V.Thulanjanan   - Thambiluvil.info