Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பிலுவில் ஜெகாவின் கலை இலக்கியப் பிரவேசம்

By- R.Sayan &  - Mr.Parthipan. G.S  தினகரன் வாரமஞ்சரியின் ''செந்தூரம்'' இதழில் எமது ஊரை சேர்ந்த திருமதி ஜெகதீஸ்வரி நாத...

By- R.Sayan &  -Mr.Parthipan.G.S 
தினகரன் வாரமஞ்சரியின் ''செந்தூரம்'' இதழில் எமது ஊரை சேர்ந்த திருமதி ஜெகதீஸ்வரி நாதன் அவர்களை பற்றிய ஒரு ஆக்கம் வெளிவந்துள்ளது .
..

ஒவ்வொருவரது இதயத்திலும் இருக்கிறது

கவிக்கோகிலம்

தம்பிலுவில் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீஸ்வரிநாதன் இலக்கிய உலகில் ‘தம்பிலுவில் ஜெகா’ என்ற நாமத்தால் நன்கறியப்பட்டும் காலூன்றியும் இருக்கும் இவ்வூரின் மூத்த பெண்படைப்பாளியுமாவார். கலைப்பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் நூலக உதவியாளராகவும் பின்னர் பட்டதாரி ஆசிரியர் சேவையிலும் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ் ஆசிரியையாகக் கடமையாற்றி வருகின்றார்.


விதை வடிவத்தில் பல்வேறு மாற்றங்களும், புதுமைகளும் புகுந்து கொண்டாலும் மரபுக் கவிதை வடிவத்தில் இன்றளவும் அதிகரித்த ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் காட்டி வருகின்ற ஒருவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கவிதாயினி. மற்றும் தனது கவிதையாக்கும் பண்புக்காக பல பரிசில்களையும் கெளரவங்களையும் பெற்றிருக்கின்றார்.
‘கவிக்கோகிலம்’ தம்பிலுவில் ஜெகா கவிதை புனைவிற்கு அப்பால் பாடல் இயற்றும் ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றார். பல மூத்த கவிஞர்களின் தலைமையிலான கவியரங்குகளிலும் பங்கு பற்றித் தன் அடையாளத்தை நிலைப்படுத்தியு முள்ளார். இலக்கிய உலகில் ஏறத்தாள முப்பத்தொன்பது வருடங்களாக செயற்பட்டு வருமிவர் தனது பிரதேசத்து மக்களை கல்வியாளர்களாக மாற்றுவதற்கான பணியையும் செய்து வருகின்றார்.

உங்களது இலக்கியப் பிரவேசம் எப்போது?

1972 ஆம் ஆண்டில் எனது பன்னிரெண்டாவது வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ‘கோயில் மணியும் கேட்கிறது’ என்ற மரபுக் கவிதைதான் எனது முதல் கவிதையாகும். 1982 வரை இளைஞர் மன்றம் ஒலி மஞ்சரி, வாலிப வட்டம், பூவும் பொருட்டு முதலான எல்லா நிகழ்ச்சிகளிலும் எனது கவிதைகள் ஒலிபரப்பாகின.
1981 இல் எனது அச்சு ஊடகத்தில் முதல் கவிதை தினகரன் வாரமஞ்சரியின் கவிதைச் சோலைப் பகுதியில் பிரசுரமானது. அந்த வகையில் அச்சு ஊடகத்தில் எனது கவிதைக்கு களம் அமைத்துத்தந்த முதல் பத்திரிகை தினகரனே ஆகும். அதற்கான எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

புதுக்கவிதையில் உங்கள் ஈடுபாடு எப்படி?

புதுக்கவிதைகள் சில நான் யார்த்துள்ளேன். என்றாலும் மரபுக் கவிதை மீதுதான் எனக்கு அதிக காதல். ஏனென்றால் கவிதை தான் எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவம். ஓசை நயமிக்க சங்கக் கவிதைகளை நான் கூடுதலாக இரசித்துப் படிப்பதுண்டு. இதனால் புதுக்கவிதைகள் எழுதி வந்தாலும், மரபுக் கவிதைகளைத்தான் நான் அதிகம் வடித்துளளேன். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளை வெளியிடும் அளவில் கையிருப்புண்டு.

உங்கள் கவிதைத் தொகுதி முயற்சிகள்?

தனித்தொகுதி போடுமளவில் ஏராளமான கவிதைகளை நான் படைத்திருந்த போதிலும், இன்று வரை தனியான தொகுதி ஒன்றினை வெளிக்கொணராமை பெருங்குறையாகவே இருக்கின்றது. கூடிய விரைவில் ‘பொதிகை’ என்ற மகுடத்தில் எனது மரபுக் கவிதைகளின் ஒரு பகுதியை உள்ளடக்கி வெளியிடுவதற்கான முயற்சியில் இருக்கின்றேன்.
என்றாலும் கூட்டு முயற்சியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிதாயினிகளின் கவிதைகளை இணைத்து வெளிவந்த ‘இன்னும் விடியவில்லை’ (1998) ‘கண்ணாடி முகங்கள்’ (2009), ‘கவிதைகள் பேசட்டும்’ (2010) என்கின்ற மூன்று தொதிகளில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன


கவிதை பற்றிய உங்கள் பார்வை?
பழைமையை மட்டும் பற்றிப்பிடிக்காது புதுமையையும் காட்டும் புதிய வீச்சை கவிதைகள் தரல் வேண்டும். கவிதையின் உத்தியும் உள்ளடக்கமும் முக்கியமானவை. இலக்கியங்கள் வாசிக்கப்படும் போது அனுபவங்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொருவரது இதயத்திலும் ஒவ்வொரு இலக்கியம் இருக்கிறது.

அநேகமான பெண் எழுத்தாளர்கள் திருமணத்தின் பின் காணாமற் போய் விடுவதுண்டு. இதுபற்றி...?

உண்மைதான் திருமணத்தின் பின் பெண் எழுத்தாளர்கள் காணாமற் போவதில் நியாயங்களும், நியாயங்கள் இல்லாமையும் இருப்பதுண்டு. வீட்டுச்சுமை, குழந்தைகள் பராமரிப்பு, உடல் அசதி என்று பல காரணங்கள் இதற்கு இருக்கின்றது. எது எப்படி இருந்தாலும் தனக்குக் கிடைத்திருக்கும் கணவனின் இலக்கிய இரசித்தல் மனோ நிலையைப் பொறுத்து ஒரு பெண்படைப்பாளி திருமணத்தின் பின்னரும் நின்றிலங்க முடியும். எனது அருமைக் கணவர் நாதன் எனது எல்லா இலக்கிய முயற்சிகளிலும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இன்றுவரை என்னால் இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்க முடிகின்றது. இது எனது அனுபவத்தின் பதிவு.

மெல்லிசைப் பாடல்களின் உங்கள் பங்கு?

மெல்லிசை பாடல்கள் புனையும் ஆற்றல் எனக்குள் மிகுந்து இருந்தது. அதன் வெளிப்பாடாகச் சில பாடல்களை இயற்றி உள்ளேன். ‘மாளிகை போன்றதோர் உடல் படைத்து வானத்து நிலவு சிரிக்குது’, ‘உள்ளமெனுங் கோவிலிலே...’ போன்ற பிரபலமான எனது மெல்லிசைப் பாடல்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் ஒரிபரப்பப்பட்டு எனது பாடல்கள் பிரகாசித்தன.
சிறுகதை ஈடுபாடு எப்படி?
சிறுகதைகளில் சிறுகாலம் கழிந்ததுண்டு. அதுவும் வனொலியில்தான். அச்சு ஊடகங்களில் எனது சிறு கதைகள் வெளிவரவில்லை. அதற்குக் காரணம் நான் சிறு கதைத் துறையில் அதிக ஆர்வத்தைக் கொண்டிராமைதான். இதனால் தான் சிறுகதைத்துறையில் எனது வளர்ச்சி இல்லாமையானது.

உங்கள் படைப்புக்கள் சந்தித்த விருதுகள் தொடர்பாக?

1998 இல் கல்முனை கல்வி வலய மட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினப் போட்டியிலும் 2002 இல் வடக்கு, கிழக்கு கல்வி மேம்பாட்டுப் பேரவையின் எழுத்தாக்கப் போட்டியிலும் 2009 இல் மாகாண இலக்கிய பாடலாக்கப் போட்டியிலும் முதற் பரிசுகள் பெற்றுள்ளேன். 1997 இல் திருக்கோவில் சாகித்திய விழாவிலும் 1998 இல் அக்கரைப்பற்று சுவாட் அமைப்பினாலும் 1999 இல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திவ்வியநாதன் அவர்களாலும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டேன். 1999 இல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களால் ‘கவிக்கோகிலம்’ பட்டமளிக்கப்பட்டேன். மற்றும் மகளிர் தினங்களில் பெண்ணியல் அமைப்புக்களாலும் கிடைத்த பாராட்டுக்களும் விருதுகளும் உள்ளன.

உங்கள் ஊடகத்துறை பங்களிப்பு?
பத்திரிகைத்துறையை பொறுத்தமட்டில் தம்பிலுவில் ம.ம.வித்தியாலயத்தின் பாடசாலை கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக ஆரம்பித்து பின்னர் 1982 இல் சாய்ந்தமருதிலிருந்து வெளியான ‘கோகிலம்’ சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளேன். தற்போது மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கவிஞன், கதிரவன் சஞ்சிகைகளின் ஆலோசகராகவும் இருந்து வருகிறேன்.
உங்கள் கவியரங்கு பங்குபற்றுதல்?
பற்பல கவியரங்குகளில் பங்குபற்றியிருக்கிறேன். திருகோணமலை கவிராயர், திருக்கோவில் திவ்வியநாதன், தமிலைத்துமிலன், பாவலர் பkல் காரியப்பர், எஸ். முத்துமீரான், பாலமுனை பாறூக் போன்றோரின் தலைமையில் பல்வேறு விழாக்களில் கவிதைகள் பாடியிருக்கிறேன்.